காலிக்குடங்களுடன் 'கொந்தளிக்கும்' பெண்கள் தண்ணீருக்கு தவம்! 20 நாளுக்கு ஒருமுறை வினியோகிப்பதால் அவதி

தினமலர்  தினமலர்
காலிக்குடங்களுடன் கொந்தளிக்கும் பெண்கள் தண்ணீருக்கு தவம்! 20 நாளுக்கு ஒருமுறை வினியோகிப்பதால் அவதி

கோவை: கோவை நகரில், 20 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் வினியோகிக்கப்படுவதால், குடிநீருக்காக மக்கள் வீதி வீதியாக அலையத் துவங்கியுள்ளனர். தண்ணீர் லாரி வருகைக்காக, வீதிகளில் காலிக்குடங்களுடன் பெண்கள் மணிக்கணக்கில் காத்திருக்கின்றனர். ஒருவருக்கு இரண்டு குடங்களே தருவதால், மிகுந்த அதிருப்தியில் உள்ளனர்.
கோவை மாநகராட்சி பகுதியில், 18 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். வேலை நிமித்தமாக, 2 லட்சம் பேர் வந்து செல்கின்றனர். சிறுவாணி, பில்லுார், ஆழியாறு கூட்டு குடிநீர் திட்டம், பவானி கூட்டு குடிநீர் திட்டங்களின் கீழ், குடிநீர் சப்ளை செய்யப்பட்டது.
இரு பருவ மழைகளும் பொய்த்ததால், சிறுவாணி நீர் மட்டம் நிரந்தர இருப்புக்கு கீழே சென்று விட்டது. அதனால், ஒரு சொட்டு தண்ணீர் கூட வருவதில்லை.அணைப்பகுதியில் தேங்கியுள்ள தண்ணீரை 'பம்ப்' செய்ய, கேரள அரசுடன், தமிழக அரசு அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர். பேச்சு இழுபறியாகி வருவதால், பில்லுார் அணையில் பெறப்படும் தண்ணீரைக் கொண்டு சமாளிக்க வேண்டியுள்ளது.
இதனால், அனைத்து பகுதிக்கும் சீராக, 12 நாட்கள் இடைவெளியில் குடிநீர் சப்ளை செய்ய, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.சிறுவாணி தண்ணீர் சப்ளையான, 33 வார்டுகளுக்கு, குடிநீர் வினியோகித்து, 20 நாட்களாகி விட்டன. 'மினரல் கேன்' வாங்கியும், லாரி தண்ணீர் வாங்கியும், பொதுமக்கள் சமாளிக்கின்றனர்.
இருப்பினும் சமாளிக்க முடியாமல், காலி குடங்களுடன் ரோட்டுக்கு வர ஆரம்பித்துள்ளனர். பொதுக்குழாய்களை தேடி வீதி வீதியாக அலைகின்றனர். தேவைப்படும் இடங்களுக்கு லாரி தண்ணீர் வழங்கி, மாநகராட்சி சமரசம் செய்து வருகிறது.
மாநகராட்சி, 25வது வார்டுக்கு உட்பட்ட சுக்ரவாரப்பேட்டை அருகே தெப்பக்குளம் முதலாவது வீதியிலும், லிங்கப்ப செட்டியார் வீதிகளிலும், நுாற்றுக்கணக்கான பெண்கள், நேற்று காலிக்குடங்களுடன் தண்ணீருக்காக வரிசையாக காத்திருந்தனர்.
தெப்பக்குளம் முதலாவது வீதியில் வரிசையில் நின்றிருந்தவர்களுக்கு, ஒரு நபருக்கு, 2 குடம் வீதம், லாரி தண்ணீர் வழங்கப்பட்டது. கால் கடுக்க பெண்கள் வரிசையில் காத்திருந்து தண்ணீர் பெற்றுச் சென்றனர்.
எம்.ஜி.ஆர்., 100வது பிறந்த நாளையொட்டி, பள்ளிகளுக்கு விடுமுறை அளித்திருந்ததால், குழந்தைகளும் வீட்டில் இருந்தனர். அவர்கள், பெற்றோருக்கு உதவியாக, இரண்டு காலி குடங்களை கைகளில் எடுத்துக் கொண்டு, வரிசையில் நின்றிருந்தனர்.
சிறுவர்கள், தண்ணீர் குடங்களை, தோள்பட்டையில் சுமந்து வீட்டுக்கு எடுத்துச் சென்றதை பார்த்தபோது, இப்போதே இந்நிலைமை என்றால், கோடை காலத்தில் என்னாகும் என்ற கவலை அனைவரையும் தொற்றிக் கொண்டது.
தண்ணீருக்குக் காத்திருந்த பெண்கள் கூறியதாவது:வீட்டு இணைப்புக்கு குடிநீர் சப்ளையாகி, 20 நாட்களாகி விட்டன. ஒரு வாரத்துக்கு முன், ஒரு லாரி தண்ணீர் வழங்கப்பட்டது. வீட்டுக்கு நான்கு குடம் தண்ணீரே கிடைக்கிறது.கூடுதல் தேவைக்கு கேன் தண்ணீர் வாங்குகிறோம். ஒரு கேன், 30 முதல், 40 ரூபாய் வரை வசூலிக்கின்றனர். இதற்குமுன் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சப்பை தண்ணீர் வழங்கினர். இப்போது, அதுவும் வருவதில்லை. விலைக்கு லாரி தண்ணீர் வாங்கி, சமாளிக்கிறோம்.தண்ணீர் தேவைக்காக மட்டும் மாதந்தோறும், 1,000 ரூபாய்க்கு மேல் செலவாகிறது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் சப்பை தண்ணீர் வழங்கவும், வாரம் ஒருமுறையாவது குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'சிறுவாணியில் தண்ணீர் 'பம்ப்' செய்ய, கேரளாவுடன் தொடர்ந்து பேசி வருகிறோம். அனுமதி கிடைத்தால், நாளொன்றுக்கு, 3 கோடி லிட்டர் தண்ணீர் கிடைக்கும்.சிறுவாணி தண்ணீர் சப்ளையான இடங்களுக்கு, பில்லுார் தண்ணீர் சப்ளை செய்கிறோம். பொதுமக்களும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.வீட்டு இணைப்புக்கு குடிநீர் வராவிட்டால், அந்தந்த மண்டல அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கலாம்' என்றனர்.
ரோட்டுக்கு வாங்க... உடனே தர்றோம்!குடிநீர் பிரச்னை தொடர்பாக, பொதுமக்கள் முறையிடுவதற்காக, ஒவ்வொரு மண்டலத்துக்கும் பொறுப்பாளர்கள் நியமித்து, மொபைல் எண்களை, மாநகராட்சி கமிஷனர் விஜயகார்த்திகேயன் அறிவித்தார்.
அந்த எண்ணுக்கு பொதுமக்கள் தொடர்பு கொண்டால், 'காலிக்குடங்களுடன் ரோட்டுக்கு வந்தாலோ அல்லது, மறியல் செய்தால் மட்டுமே, லாரி தண்ணீர் சப்ளை செய்ய, உயரதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். வீட்டு இணைப்புக்கு சப்ளை தாமதமாகிறது என்பதற்காக, லாரி தண்ணீர் வழங்க முடியாது' என, குடிநீர் பொறுப்பாளர்கள் பதிலளிக்கின்றனர்.
'மறியல் போராட்டம் நடத்தினால்தான் தண்ணீர் தருவீர்களா? எங்களை போராட்டம் செய்ய ஏன் துாண்டுகிறீர்கள்' என, பொதுமக்கள் கேட்டால், 'அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது; காலிக்குடங்களுடன் ரோட்டுக்கு வந்தால், முன்னுரிமை கொடுத்து தண்ணீர் தர சொல்லியிருக்கிறார்கள்' என, மாநகராட்சி அலுவலர்கள் அலட்சியமாக பதிலளித்துள்ளனர். அலுவலர்களின் முறையற்ற பதிலால், பொதுமக்கள் வெறுப்படைந்துள்ளனர்.

மூலக்கதை