ஆஸி. ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் நடால்

தினகரன்  தினகரன்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, நட்சத்திர வீரர் ரபேல் நடால் (ஸ்பெயின்) தகுதி பெற்றார். முதல் சுற்றில் ஜெர்மனியின் புளோரியன் மேயருடன் (49வது ரேங்க்) நேற்று மோதிய நடால் 6-3, 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வென்றார். இப்போட்டி 2 மணி, 4 நிமிடம் நீடித்தது. மற்றொரு முதல் சுற்றில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் (2வது ரேங்க்) 6-1, 7-6 (7-4), 6-2 என்ற நேட் செட்களில் ஸ்பெயின் வீரர் பெர்னாண்டோ வெர்டாஸ்கோவை வீழ்த்தினார். முன்னணி வீரர்கள் மிலோஸ் ரயோனிச் (கனடா), கிரிகோர் திமித்ரோவ் (பல்கேரியா), டேவிட் பெர்ரர் (ஸ்பெயின்), டேவிட் காபின் (பெல்ஜியம்), டொமினிக் தியம் (ஆஸ்திரியா), கேல் மான்பில்ஸ் (பிரான்ஸ்), பாடிஸ்டா அகுத் (ஸ்பெயின்), மார்கோஸ் பாக்தாதிஸ் (சைப்ரஸ்) ரேடக் ஸ்டெபானக் (செக்.) ஆகியோரும் 2வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், டென்மார்க் வீராங்கனை கரோலினா வோஸ்னியாக்கி 6-1, 6-2 என்ற நேர் செட்களில் அரினா ரோடியோனோவாவை (ஆஸி.) மிக எளிதாக வீழ்த்தினார். நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா, 2வது ரேங்க்) 6-4, 6-3 என்ற நேர் செட்களில் பெலிண்டா பென்சிக்கை (சுவிஸ்) வீழ்த்தினார். ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர் தனது முதல் சுற்றில் 3-6, 6-3, 0-6 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் ஹீதர் வாட்சனிடம் அதிர்சி தோல்வியடைந்தார்.  மூன்றாவது ரேங்க் வீராங்கனை அக்னீஸ்கா ரத்வன்ஸ்கா (போலந்து), தனது முதல் சுற்றில் பல்கேரியாவின் ஸ்வெடனா பிரான்கோவாவுடன் நேற்று மோதினார். முதல் செட்டில் அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த அவர் 6-1 என வென்று முன்னிலை பெற்றார். 2வது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த பிரான்கோவா 6-4 என கைப்பற்றி சமநிலை ஏற்படுத்தினார். எனினும், கடைசி செட்டில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய ரத்வன்ஸ்கா 6-1, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். முன்னணி வீராங்கனைகள் கரோலினா பிளிஸ்கோவா, பார்போரா ஸ்டிரைகோவா, லூசி சபரோவா (செக்.), ஜோகன்னா கோன்டா (இங்கிலாந்து), டொமினிகா சிபுல்கோவா (ஸ்லோவகியா), எகடரினா மகரோவா, எலினா வெஸ்னினா (ரஷ்யா), சாரா எர்ரானி (இத்தாலி), ஆலிஸ் கார்னெட் (பிரான்ஸ்) ஆகியோரும் 2வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

மூலக்கதை