வேறு உலகத்தில் இருந்து வந்துள்ளார் இந்திய கேப்டன் விராட் கோஹ்லிக்கு - வாஹன், நாசர் ஹூசைன் பாராட்டு

தமிழ் முரசு  தமிழ் முரசு
வேறு உலகத்தில் இருந்து வந்துள்ளார் இந்திய கேப்டன் விராட் கோஹ்லிக்கு  வாஹன், நாசர் ஹூசைன் பாராட்டு

லண்டன்: புனேவில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோஹ்லி 122 ரன் குவித்தார். இதன் உதவியால் இந்தியா 3 விக்கெட் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்று, 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இதனிடையே சதம் விளாசிய விராட் கோஹ்லிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன், போர்ச்சுக்கல் மற்றும் ரியல் மாட்ரிட் அணிகளின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோவுடன், விராட் கோஹ்லியை ஒப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட்டின் கிறிஸ்டியானா ரொனால்டோ என்றால், அது விராட் கோஹ்லிதான் என அவர் கூறியுள்ளார். இங்கிலாந்து அணியின் மற்றொரு முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹன் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ஒரு நாள், டி20, டெஸ்ட் என மூன்று வகையான கிரிக்கெட்டிலும் விராட் கோஹ்லி சிறந்த வீரர்.

அவர் வேறு ஒரு உலகத்தில் இருந்து வந்துள்ளார்’ என பாராட்டியுள்ளார்.

கட்டாக் செல்வதில் தாமதம்: இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது போட்டி வரும் 19ம் தேதி (நாளை மறு நாள்) ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெறுகிறது.

இங்கு கடந்த 2015ம் ஆண்டு இந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 போட்டி நடந்தபோது, தண்ணீர் பாட்டில்களை வீசி ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர். தற்போது இந்தியா-இங்கிலாந்து அணி வீரர்கள் அங்கு பயணிப்பதில் தடை ஏற்பட்டுள்ளது.

திருமணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காக ஓட்டல் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டதால், இரு அணி வீரர்களுக்கும் அறை கிடைக்கவில்லை. இதனால் நாளை காலை வரை இரு அணி வீரர்களும் புனேவிலேயே தங்கியிருப்பார்கள்.

அதன்பின்தான் கட்டாக் செல்கின்றனர்.

இது குறித்து ஒடிசா கிரிக்கெட் சங்க செயலாளர் ஆஸ்கிர்பாத் பெகிரா கூறுகையில், ‘நாளை காலை 11. 30 மணியளவில் இரு அணி வீரர்களும் கட்டாக் வருகின்றனர்.

அதன்பின் 4 மணி வரை பயிற்சி மேற்கொள்வார்கள். புதன்கிழமை முதல் ஓட்டல் அறைகள் கிடைக்கும்.   அதனால்தான் வீரர்கள் பயணத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது’ என்றார்.

உலகின் பணக்கார விளையாட்டு அமைப்புகளில் ஒன்றாக கருதப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு இது தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.



.

மூலக்கதை