பேட் பறந்து வந்து விழுந்து பீட்டர் நெவில் படுகாயம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பேட் பறந்து வந்து விழுந்து பீட்டர் நெவில் படுகாயம்

அடிலெய்டு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பீட்டர் நெவில், தற்போது நடந்து வரும் பிக் பாஷ் டி20 தொடரில், மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த தொடரில் நேற்று இரவு நடந்த போட்டி ஒன்றில், மெல்போர்ன் ரெனகேட்ஸ்-அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் மோதின.

போட்டியின்போது, ஸ்டம்புகளுக்கு பின்னால் சற்று தள்ளி பீட்டர் நெவில் ‘கீப்பிங்’ செய்து கொண்டிருந்தார். அப்போது அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியின் வீரர் பிராட் ஹாட்ஜ் பேட்டிங் செய்து கொண்டிருந்தார்.

அவர் லெக் சைடில் பந்தை அடித்தபோது, ‘கிரிப்’ கிடைக்காமல் பேட் அவரது கையை விட்டு பறந்து, பீட்டர் நெவிலின் தலையில் சென்று விழுந்தது. பந்து சென்ற திசையை பார்த்து கொண்டிருந்த பீட்டர் நெவிலுக்கு, பேட் பறந்து வந்தது தெரியவில்லை.

இதனால் மைதானத்திலேயே அவர் சுருண்டு விழுந்தார். உடனடியாக இரு அணி வீரர்களும் அவரை சூழ்ந்து கொண்டனர்.

பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, அவருக்கு ஸ்கேன் செய்யப்பட்டது. காயத்தில் இருந்து பீட்டர் நெவில் விரைவாக மீண்டு வருவார் என மெல்போர்ன் ெரனகேட்ஸ் அணியின் பிசியோதெரபிஸ்ட் நிக் அட்காக் கூறியுள்ளார்.

இந்த போட்டியில், மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணி 6 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றது.



.

மூலக்கதை