காங், பாஜவினரிடம் ஓட்டுக்கு ரூ.10 ஆயிரம் கேட்க சொன்ன கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் - தேர்தல் ஆணையம் அனுப்பியது

தமிழ் முரசு  தமிழ் முரசு
காங், பாஜவினரிடம் ஓட்டுக்கு ரூ.10 ஆயிரம் கேட்க சொன்ன கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ்  தேர்தல் ஆணையம் அனுப்பியது

புதுடெல்லி - ‘‘பாஜ, காங்கிரஸ் கட்சியினர் ஒரு ஓட்டுக்கு ரூ. 5 ஆயிரம் கொடுத்தால், ரூ. 10 ஆயிரம் கேளுங்கள்’’ என்று கோவா பிரசாரத்தில் பேசிய கெஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வரும் 19ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு அதில் உத்தரவிட்டுள்ளது.

உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள கோவா மாநிலத்தில் கடந்த 8ம் தேதி, டெல்லி  முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசினார்.

அப்போது அவர்,  ‘‘காங்கிரஸ், பா. ஜ. கட்சியினர் ஓட்டுக்கு பணம் கொடுப்பார்கள்.



அதை வாங்கிக் கொள்ளுங்கள். அவர்கள் ஒரு ஓட்டுக்கு ரூ. 5 ஆயிரம் கொடுத்தால், விலைவாசி கூடி விட்டது என்று சொல்லி  ரூ. 10 ஆயிரம் கேளுங்கள்.

ஆனால், ஓட்டை மட்டும் ஆம் ஆத்மிக்கு போடுங்கள்’’ என்று அவர் பேசியதாக  கூறப்படுகிறது. இது குறித்து, பாஜ கட்சியினர் தேர்தல் ஆணையத்திற்கு புகார் அனுப்பினர்.

இதையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் நேற்று ஒரு நோட்டீஸ்  அனுப்பியது. அதில், ‘உங்கள் பேச்சு, வாக்காளர்களை பணம் வாங்க தூண்டும்  செயலாக உள்ளது.

இதன்மூலம், நன்னடத்தை விதிமுறைகளை மீறி இருக்கிறீர்கள். இதுகுறித்து  19ம் தேதிக்குள் நீங்கள் விளக்கம் அளிக்க வேண்டும்.

இல்லாவிட்டால்,  நாங்களாகவே முடிவு எடுப்போம்’’ என்று தேர்தல்  ஆணையம் கூறியுள்ளது.

 

.

மூலக்கதை