காலண்டரில் மோடி படத்தால் சர்ச்சை - காதி துறையிடம் விளக்கம் கேட்கும் பிரதமர் அலுவலகம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
காலண்டரில் மோடி படத்தால் சர்ச்சை  காதி துறையிடம் விளக்கம் கேட்கும் பிரதமர் அலுவலகம்

புதுடெல்லி - காதி துறை வெளியிட்ட காலண்டரில் காந்தி படத்துக்கு பதிலாக மோடி படம் பிரசுரிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது இது குறித்து காதி துறையிடம் பிரதமர் அலுவலகம் விளக்கம் கேட்டிருக்கிறது.
காதி துறை வெளியிடும் வருடாந்திர காலண்டரில் மகாத்மா காந்தி, ராட்டையை சுழற்றுவது ேபால் படம் பிரசுரிக்கப்படுவது வழக்கம்.

இந்த முறை காந்திக்கு பதிலாக குர்தா பைஜாமாவில் பிரதமர் மோடி, ராட்டையை சுழற்றுவது போன்ற படம் வெளியிடப்பட்டது.

இதை கண்டு காதி ஊழியர்கள், காந்தியவாதிகள் மற்றும் காங்கிரசார் உள்பட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த விஷயத்தில் பிரதமரை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன. இதற்கிடையில் காந்தியின் படத்தை விட மோடியின் படத்திற்கு அதிக வணிக மதிப்பு உள்ளது என்று அரியானா பாஜ அமைச்சர் அனில் விஜ் பேசியது கூடுதல் சர்ச்சையை உருவாக்கியது.

பின்னர் அவர் தனது கருத்தை வாபஸ் பெற்றார். இந்த சூழலில், காலண்டரில் பிரதமர் மோடியின் படம் அவரது அலுவலகத்தில் அனுமதி பெறாமல் பிரசுரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடி படம் மூலமாக தேவையில்லாத சர்ச்சைகள் எழுந்துள்ளது பிரதமர் அலுவலகத்திற்கு கடும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, ‘பிரதமர் மோடியின் படம் ஏன் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டது’ என்று விளக்கம் கேட்டு காதி துறைக்கு பிரதமர் அலுவலகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


.

மூலக்கதை