கட்சி, சின்னம் கைக்கு வந்தது; முலாயமை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் அகிலேஷ்; உ.பி.யில் காங்கிரஸ் - சமாஜ்வாடி கூட்டணி?

தமிழ் முரசு  தமிழ் முரசு
கட்சி, சின்னம் கைக்கு வந்தது; முலாயமை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் அகிலேஷ்; உ.பி.யில் காங்கிரஸ்  சமாஜ்வாடி கூட்டணி?

புதுடெல்லி - உத்தரபிரதேசத்தில் பிப்ரவரி 11ம் தேதி  தொடங்கி ஏழு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.   ஆளும் சமாஜ்வாடி கட்சியில், அதன் தலைவர் முலாயம்சிங்குக்கும், அவருடைய மகனும், முதல்வருமான அகிலேஷ் யாதவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, கட்சி பிளவுபட்டுள்ளது. அகிலேஷ் யாதவ், கடந்த 1ம் தேதி, கட்சியின் தேசிய செயற்குழுவை கூட்டி,  கட்சி தலைவர் பதவியில் இருந்து முலாயமை நீக்கி விட்டு, தன்னை தலைவராக  அறிவித்து கொண்டார்.

ஆனால், அந்த கூட்டம் செல்லாது என்று முலாயம்சிங் கூறினார்.

அதன்பின்னர், இருதரப்பினரும் கட்சியும், கட்சியின் தேர்தல் சின்னமான சைக்கிள் சின்னமும் தங்களுக்கே சொந்தம் என்று தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர். அகிலேஷூக்கு கட்சியில் 200க்கும் மேற்பட்ட எம். எல். ஏ. க்கள்  மற்றும் எம். பி. க்கள் ஆதரவு உள்ளது.

அவர்களிடம் கையெழுத்து வாங்கிய அபிடவிட்களை அவர் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தார். அதே சமயம், அகிலேஷ் நடத்திய கட்சியின் தேசிய செயற்குழு கூட்டமே செல்லாது என்று முலாயம்  தரப்பில் ஆவணங்கள் அளிக்கப்பட்டன.

அவற்றை பரிசீலித்த தேர்தல் ஆணையம், இருதரப்பினரிடமும் விசாரணை நடத்தியது.

அகிலேஷ்  தரப்பில் பிரபல வக்கீல்கள் கபில்சிபல், ராஜீவ் தவான் ஆகியோரும், முலாயம் தரப்பில் பிரபல வக்கீல் மோகன் பராசரனும் ஆஜராகி வாதாடினர். இருதரப்பு வாதங்களை கேட்ட தேர்தல் ஆணையர்கள் கட்சியின் சைக்கிள் சின்னம், கொடி  யாருக்கு என்பது தொடர்பான தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.

இந்நிலையில், அகிலேஷ் யாதவ் தலைமையிலான பிரிவே பெரும்பான்மையான சமாஜ்வாடி கட்சி என்று தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. சமாஜ்வாடி கட்சியின் பெயர், கட்சியின் சைக்கிள் சின்னத்தை அவர்கள் பயன்படுத்தவே உரிமையுள்ளது என ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரவில், ‘‘கட்சியில் மொத்தம் உள்ள 228 எம்எல்ஏக்களில் 205 பேர், 68 எம்எல்சிக்களில் 56 பேர், 24 எம்பிக்களில் 15 பேர், 46 செயற்குழு உறுப்பினர்களில் 28 பேர், 5731 பொதுக்குழு உறுப்பினர்களில் 4400 பேர் அகிலேஷூக்கு ஆதரவாக வாக்குமூலம் அளித்துள்ளனர்’’ என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தேர்தல் ஆணைய முடிவு நேற்று மாலை வெளியானதும், உ. பி. யில் லக்னோ, அலகாபாத் உள்ளிட்ட இடங்களில் அகிலேஷ் ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தியும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இதுகுறித்து ராம்கோபால் யாதவ் கூறுகையில், ‘‘தேர்தல் ஆணையம் சரியான முடிவை எடுத்துள்ளது.

விரைவில் மெகா கூட்டணி அமைக்கப்படும்’’ என்றார். இதன்மூலம், காங்கிரசுடன் சமாஜ்வாடி கூட்டணி உறுதி என தெரிகிறது.   அகிலேஷுக்கு நேற்றிரவு முதல் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது.

காங்கிரஸ் தலைவர்கள், ஆர்ஜேடி தலைவர் லாலு உள்பட பல்வேறு தேசிய தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

இதற்கிடையே, அகிலேஷ் தனது தந்தை முலாயமை அவரது வீட்டில் சந்தித்து ஆசி பெற்றார். கட்சியில் பெரும்பான்மையினர் அகிலேஷ் பக்கமாக சென்று விட்டதால் முலாயம் இனிமேல் அவரை எதிர்க்க மாட்டார் என பேசப்படுகிறது.

சைக்கிள் சின்னம் கிடைத்த உற்சாகத்துடன் வரும் 18-ம் தேதியன்று வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கையை அகிலேஷ் வெளியிடுகிறார்.

19ம் தேதி ஆக்ரா மற்றும் அலிகர் நகரில் நடைபெறும் பிரசார கூட்டங்களில் பங்கேற்கும் அகிலேஷ், அங்கிருந்து தனது முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

.

மூலக்கதை