புதிய சிபிஐ இயக்குனராக அலோக் குமார் வர்மா தேர்வு?

தமிழ் முரசு  தமிழ் முரசு
புதிய சிபிஐ இயக்குனராக அலோக் குமார் வர்மா தேர்வு?

புதுடெல்லி - புதிய சிபிஐ இயக்குனராக டெல்லி போலீஸ் கமிஷன் அலோக் குமார் வர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிபிஐ இயக்குநராக இருந்த அனில் சின்ஹா கடந்த டிசம்பர் 2ம் தேதியுடன் ஓய்வு பெற்றார்.

இதையடுத்து, கடந்த ஒரு மாதமாக சிபிஐ இயக்குநர் பதவி காலியாக இருக்கிறது. தற்போது, சிபிஐ இயக்குநர் பதவியை இடைக்காலமாக ஐபிஎஸ் அதிகாரி ராகேஷ் அஸ்தானா கவனித்து வருகிறார்.

சிபிஐக்கு புதிய இயக்குநரை தேர்வு செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஜே. எஸ். கேஹர் ஆகியோரைக் கொண்ட குழு நேற்று கூடி ஆலோசனை நடத்தியது.

ஏற்கனவே சிபிஐ இயக்குநர் பதவிக்கு தகுதி வாய்ந்த 45 ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியல் இக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. அந்த பட்டியலில் கடைசியாக, டெல்லி போலீஸ் கமிஷனர் அலோக் குமார் வர்மா, மகாராஷ்டிர டிஜிபியான எஸ். சி. மாத்தூர், சிபிஐ மூத்த அதிகாரி ரூபக்குமார் தத்தா ஆகியோர் பெயர்களே பரிசீலிக்கப்பட்டதாகவும், அவர்களில் டெல்லி போலீஸ் கமிஷனர் அலோக் குமார் வர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வடகிழக்கு மாநிலங்கள் பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான அலோக் குமார் வர்மாவே அதிக தகுதிகள் படைத்தவராக இருந்தார் என்றும் சொல்லப்படுகிறது.

சிபிஐ இயக்குனர் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

.

மூலக்கதை