பஞ்சாப் சட்டசபை தேர்தலில் முதல்வர் பாதலை எதிர்த்து அமரீந்தர்சிங் போட்டி - காங்கிரஸ் விறுவிறுப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
பஞ்சாப் சட்டசபை தேர்தலில் முதல்வர் பாதலை எதிர்த்து அமரீந்தர்சிங் போட்டி  காங்கிரஸ் விறுவிறுப்பு

சண்டிகர் - பஞ்சாப் தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள காங்கிரஸ் கட்சி விறுவிறுப்பாக செயல்படுகிறது. முதல்வர் பாதலை எதிர்த்து அமரீந்தர் சிங் நிறுத்தப்பட்டுள்ளார்.

சமீபத்தில் கட்சியில் சேர்ந்த சித்து, தனது மனைவியின் தொகுதியில் மனு தாக்கல் செய்தார். பஞ்சாபில் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான அகாலி தளம்-பாஜ கூட்டணி அரசு கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளது.

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு, போதை பொருள் விவகாரம், பதன்கோட் தாக்குதல் உள்ளிட்டவற்றை கையில் எடுத்துக் கொண்டு பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் களத்தில் இறங்கியுள்ளது. ஆட்சியை இழந்த 10 ஆண்டுக்கு பிறகு தற்போது எப்படியும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது.



அதே போல், கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மியும் ஆளும் அணிக்கு சவாலாக உள்ளது. இந்த சூழலில், முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து சமீபத்தில் ராகுல்காந்தியை சந்தித்து காங்கிரசில் இணைந்தார்.

இது பஞ்சாப் தேர்தல் களத்தில் காங்கிரசுக்கு புதிய டானிக்  போல அமைந்துள்ளது. லம்பி தொகுதியில் அகாலிதளம் சார்பில் முதல்வர் பாதல் மனு தாக்கல் செய்திருந்தார்.

தற்போது அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வரும், மூத்த தலைவருமான கேப்டன் அமரீந்தர் சிங் மனு தாக்கல் செய்துள்ளார். பஞ்சாபின் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக இவர் உள்ளார்.

முதன்முறையாக முதல்வரை எதிர்த்து முதல்வர் வேட்பாளர் களத்தில் இறங்கியுள்ளதால் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சித்து ஏற்கனவே தனது மனைவி நவ்ஜோத் கவுர் எம்எல்ஏவாக இருந்த அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். கவுர் கடந்த முறை பாஜ சார்பில் இங்கு போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.

காங்கிரசில் சேரும் முன், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரசில் பெரும்பாலான தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர்.


.

மூலக்கதை