மத்திய அமைச்சர் மீது திரிணாமுல் தாக்குதல் - மேற்கு வங்கத்தில் பரபரப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
மத்திய அமைச்சர் மீது திரிணாமுல் தாக்குதல்  மேற்கு வங்கத்தில் பரபரப்பு

துர்காபூர் - மேற்கு வங்கத்தில் பாஜ - திரிணாமுல் கட்சி மோதல் நீடிக்கிறது. மத்திய பாஜ அமைச்சர் பாபுல் சுப்ரியோ கார் மீது திரிணாமுல் தொண்டர்கள் நேற்று கல்வீசி தாக்கினர்.

ரூபாய் நோட்டு செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவரது தலைமையிலான திரிணாமுல் கட்சி தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறது.

இந்த சூழலில், ரோஸ்வேலி நிதி நிறுவன மோசடி வழக்கில் கோடிக்கணக்கில் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட திரிணாமுல் எம்பிக்கள் தபஸ் பால் மற்றும் சுதீப் பந்தோபாத்யாயா ஆகியோர் சிபிஐயால் கைது செய்யப்பட்டனர். இது திரிணாமுல் தொண்டர்கள் மத்தியில் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

 இந்த நிநி நிறுவன மோசடியில் பாஜவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோவுக்கும் தொடர்பு உள்ளது என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க மறுப்பது ஏன் என்றும் திரிணாமுல் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

மேற்கு வங்கத்தில் பாபுல் சுப்ரியோவுக்கும், திரிணாமுல் நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. இந்த சூழலில் துர்காபூர் பகுதிக்கு பாபுல் சுப்ரியோ நேற்று சென்ற போது, அவரது பாதுகாப்பு வாகனங்களை திரிணாமுல் தொண்டர்கள் தாக்கினர்.



இதுகுறித்து பாபுல் சுப்ரியோ கூறுகையில், ‘‘துர்காபூர் அனல் மின் நிலையத்தை ஆய்வு செய்வதற்காக சென்றிருந்தேன். திரிணாமுல் தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டு எனது பாதுகாவலர் வாகனங்களை தாக்கினர்.

எனது கார் வளாகத்திற்குள் நுழைந்ததும் எனது காரை நோக்கி கற்களை வீசி தாக்கினர். எனது காரை அடித்து உடைக்கவும் முயற்சி செய்தனர்.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை கமாண்டர், உள்ளூர் போலீசாரை அழைத்த போது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என்று குற்றம்சாட்டினார்.

இந்த சம்பவம் மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை