சாவின் விளிம்பில் இரண்டு தமிழர்கள்: தப்ப வைக்க சுஷ்மா பெரும் முயற்சி

தினமலர்  தினமலர்
சாவின் விளிம்பில் இரண்டு தமிழர்கள்: தப்ப வைக்க சுஷ்மா பெரும் முயற்சி

கத்தார்: கத்தாரில் நடந்த மூதாட்டி கொலை வழக்கில், குற்றம் உறுதி செய்யப்பட்டு, மரண தண்டனை பெற்றுள்ள இரண்டு தமிழர்களின் தண்டனையை குறைக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் தூதரகம் மூலம் முயற்சி செய்து வருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறி உள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த சுப்ரமணியம், பெருமாள் மற்றும் அர்ச்சுனன் ஆகியோர் கத்தாரில் நடந்த ஒரு மூதாட்டி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர். இது குறித்த விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கில், சுப்ரமணியம் மற்றும் பெருமாள் ஆகியோருக்கு மரண தண்டனையும், அர்ச்சுனனுக்கு ஆயும் தண்டனையையும் விதித்து கத்தார் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து, சுப்ரமணியனும், பெருமாளும் விரைவில் தூக்கிலிடப்பட உள்ளனர்.
இந்நிலையில், அவர்களின் குற்றத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை அதிகம் என்றும், மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், கத்தார் தூதரகம் மூலம் அந்நாட்டு அரசிடம் கோரி உள்ளார். மேலும், இது குறித்து கோர்ட்டில், கருணை மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் சார்பாக, கத்தார் கோர்ட்டில் கருணை மனு தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்படி, தமிழக அரசை மத்திய வெளியுறவுத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
நிலைமை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், சிறந்த வழக்கறிஞர்களை கொண்டு, தமிழர்களின் தண்டனையை குறைக்க வேண்டிய நடவடிக்கைகளை கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் மேற்கொண்டு வருவதாக வெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறி உள்ளார்.

மூலக்கதை