கர்நாடக வக்கீல் ஆச்சார்யா சுயசரிதையில் கூறியுள்ளவை பற்றி விசாரணை கோரிய மனு...

தினத்தந்தி  தினத்தந்தி
கர்நாடக வக்கீல்
ஆச்சார்யா சுயசரிதையில் கூறியுள்ளவை பற்றி விசாரணை கோரிய மனு...

புதுடெல்லி,

சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் பி.வி.ஆச்சார்யா தன்னுடைய சுயசரிதையில் கூறிய சில பரபரப்பு தகவல்கள் பற்றி விசாரணை நடத்தக்கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

கர்நாடக வக்கீல்

கர்நாடக அரசின் முன்னாள் அட்வகேட் ஜெனரல் மற்றும் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் அரசு சிறப்பு வக்கீலாக ஆஜரான பி.வி.ஆச்சார்யா தனது வாழ்க்கை வரலாற்றை ‘ஆல் பிரம் மெமெரி’ (அத்தனையும் நினைவில் இருந்து) என்ற பெயரில் புத்தகமாக எழுதியுள்ளார்.

இந்த புத்தகத்தில் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு குறித்து சுமார் 14 பக்கங்களும், 30-க்கும் மேற்பட்ட இணைப்புகளும் உள்ளன. இதில் ஆச்சார்யா பல பரபரப்பு தகவல்களை கூறியிருந்தார். இந்த வழக்கு நடைபெற்றபோது தான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டதாகவும் தனக்கு பலவகையிலும் அச்சுறுத்தல்கள் தொடர்ந்ததாகவும் எழுதியிருந்தார்.

மனு தள்ளுபடி

இந்நிலையில் ஆச்சார்யா புத்தகத்தில் கூறியுள்ள தகவல்கள் பற்றி உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பி.ரத்தினம் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், பாலிநாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடங்கியதும் இந்த மனுவை விசாரிப்பதற்கான முகாந்திரம் ஏதும் இல்லை என்று கூறி நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

கடந்த நவம்பர் மாதம் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி யு.யு.லலித் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

மூலக்கதை