முதல் இன்னிங்சில் 595 எடுத்தும் வேஸ்ட் : நியூசிலாந்திடம் வீழ்ந்தது வங்கதேசம்

தினகரன்  தினகரன்

வெலிங்டன்: வங்கதேச அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது. பேசின் ரிசர்வ் மைதானத்தில் நடந்து வந்த இப்போட்டியில் (ஜன. 12-16), டாசில் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசியது. அபாரமாக விளையாடிய வங்கதேசம் முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 595 ரன் குவித்து டிக்ளேர் செய்தது (152 ஓவர்). ஷாகிப் அல் ஹசன் 217, கேப்டன் முஷ்பிகுர் ரகிம் 159, தமிம் இக்பால் 56, மோமினுல் 64, சப்பிர் ரகுமான் 54* ரன் விளாசினர். நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 539 ரன் குவித்து ஆல் அவுட்டானது. டாம் லதாம் 177, சான்ட்னர் 73, கேப்டன் வில்லியம்சன், நிகோல்ஸ் தலா 53, வாட்லிங் 49 ரன் விளாசினர். இதையடுத்து, 56 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம் 160 ரன்னுக்கு சுருண்டது (57.5 ஓவர்). சப்பிர் ரகுமான் 50, தமிம் 25, இம்ருல் 36 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். நியூசி. பந்துவீச்சில் போல்ட் 3, சான்ட்னர், வேக்னர் தலா 2, சவுத்தீ 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 217 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 39.4 ஓவரிலேயே 3 விக்கெட் இழப்புக்கு 217 ரன் எடுத்து நம்ப முடியாத வகையில் வெற்றியை வசப்படுத்தியது. லதாம் 16, ஜீத் ராவல் 13, ராஸ் டெய்லர் 60 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் கேன் வில்லியம்சன் 104 ரன் (90 பந்து, 15 பவுண்டரி), நிகோல்ஸ் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூசி. வீரர் டாம் லதாம் ஆட்ட நாயகன் விருது பெற்றார். முதல் இன்னிங்சில் மிகப் பெரிய ஸ்கோர் அடித்தும் தோல்வியைத் தழுவிய வங்கதேசம் மோசமான சாதனையை சொந்தமாக்கிக் கொண்டது. முன்னதாக, 1894-95ல் சிட்னியில் நடந்த டெஸ்டில் இங்கிலாந்துக்கு எதிராக முதல் இன்னிங்சில் 586 ரன் எடுத்த ஆஸ்திரேலியா பின்னர் தோல்வியடைந்ததே அதிகபட்சமாக இருந்தது. மொத்தம் 2 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து 1-0 என முன்னிலை வகிக்க, கடைசி டெஸ்ட் கிறைஸ்ட்சர்ச்சில் 20ம் தேதி தொடங்குகிறது.

மூலக்கதை