சச்சினின் மைல்கற்களை எட்ட முடியாது : விராத் கோஹ்லி

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: மாஸ்டர் பிளேஸ்டர் சச்சினின் சாதனை மைல்கற்களை எட்டுவது என்பது இயலாத காரியம் என்று இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி கூறியுள்ளார். இங்கிலாந்துடன் புனே மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த முதல் ஒருநாள் போட்டியில், சேசிங்கில் தனது 17வது சதத்தை விளாசிய கோஹ்லி, முதல் இடத்தில் இருந்த சச்சினின் சாதனையை சமன் செய்தார். எனினும், சச்சின் 232 இன்னிங்சில் படைத்த சாதனையை கோஹ்லி 96வது இன்னிங்சிலேயே (சேசிங்) எட்டியுள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் சாதனை மன்னனாக விளங்கும் சச்சினின் அனைத்து சாதனைகளையும் கோஹ்லி முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அது பற்றி நினைத்துக் கூட பார்க்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து டெல்லியில் நேற்று அவர் கூறியதாவது: சச்சினின் சில சாதனை மைல்கற்களை எட்டுவது மிகவும் கடினம், சரியாகச் சொல்வதென்றால் யாராலும் முடியாத காரியம். அவரைப் போல 24 ஆண்டுகளுக்கு என்னால் விளையாட முடியாது. 200 டெஸ்ட், சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதம் என்பதெல்லாம் பிரமிக்க வைக்கும் சாதனைகள். அதே சமயம், எனக்கென தனி முத்திரை பதிக்கவும் அவரைப் போன்ற மகத்தான வீரர்கள் வரிசையில் இடம் பிடிக்கவும் விரும்புகிறேன். நட்பு மற்றும் உறவினர் வட்டம் பெரிய அளவில் இல்லாதது எனக்கு மிகவும் உதவியாக உள்ளது என நினைக்கிறேன். இதனால் கிரிக்கெட்டுக்காக எனது நேரத்தை அதிகம் செலவழிக்க முடிகிறது. வாழ்க்கையில் எதற்குமே ஒரு எல்லை வகுத்துக் கொள்வதில்லை. எனது அதிகபட்ச திறன் என்ன என்பதை தெரிந்து கொள்வதற்காக கடுமையாக உழைப்பேன். இன்று வரை அதில் சிக்கல் எதுவும் இல்லாமல் நீடிப்பதில் மகிழ்ச்சி.இவ்வாறு கோஹ்லி கூறியுள்ளார்.

மூலக்கதை