ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 2வது சுற்றுக்கு முன்னேறினார் கெர்பர்

தினகரன்  தினகரன்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, நடப்பு சாம்பியன் ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) தகுதி பெற்றார். ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன், மெல்போர்ன் நகரில் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் லெசியா சுரென்கோவுடன் (உக்ரைன், 51வது ரேங்க்) மோதிய நம்பர் 1 வீராங்கனை கெர்பர் 6-2 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த சுரென்கோ 7-5 என்ற கணக்கில் வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 3வது மற்றும் கடைசி செட்டில் அதிரடியாக விளையாடி சுரென்கோவின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்த கெர்பர் 6-2, 5-7, 6-2 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு முதல் சுற்றில் 4வது ரேங்க் வீராங்கனையான சிமோனா ஹாலெப் (ரோமானியா) 3-6, 1-6 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் ஷெல்பி ரோஜர்சிடம் (52வது ரேங்க்) அதிர்ச்சி தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார். நட்சத்திர வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) 7-6 (7-5), 7-5 என்ற நேர் செட்களில் உக்ரைனின் கேதரினா கோஸ்லோவாவை வீழ்த்தி 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார். முன்னணி வீராங்கனைகள் கார்பினி முகுருசா (ஸ்பெயின்), ஸ்வெட்லனா கஸ்னட்சோவா (ரஷ்யா), மோனா பார்தெல் (ஜெர்மனி), சுவாரெஸ் நவரோ (ஸ்பெயின்), ஸ்விடோலினா (உக்ரைன்), ஜெலினா ஜன்கோவிச் (செர்பியா), மோனிகா புயிக் (போர்டோ ரிகோ), ஷுவாய் பெங் (சீனா) ஆகியோரும் 2வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.தப்பினார் நிஷிகோரி: ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஜப்பான் வீரர் கெய் நிஷிகோரி (5வது ரேங்க்), ரஷ்யாவின் ஆந்த்ரே கஸ்னெட்சோவுடன் (48வது ரேங்க்) மோதினார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில், நிஷிகோரி 5-7, 6-1, 6-4, 6-7 (6-8), 6-2 என 5 செட்களில் 3 மணி, 34 நிமிடம் போராடி வென்றார். நம்பர் 1 வீரர் ஆண்டி மர்ரே (இங்கிலாந்து), தனது முதல் சுற்றில் 7-5, 7-6 (7-5), 6-2 என்ற நேர் செட்களில் மார்சென்கோவை (உக்ரைன்) வீழ்த்தினார். சுவிஸ் வீரர் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்கா (4வது ரேங்க்) 4-6, 6-4, 7-5, 4-6, 6-4 என 5 செட்களில் 3 மணி, 24 நிமிடம் போராடி மார்டின் கிளிசானை (ஸ்லோவகியா) வென்றார். முன்னணி வீரர்கள் தாமஸ் பெர்டிச் (செக்.), மரின் சிலிச் (குரோஷியா), ஜோ வில்பிரைடு சோங்கா (பிரான்ஸ்), ஜாக் சாக் (அமெரிக்கா), டூடி சேலா (இஸ்ரேல்) ஆகியோரும் 2வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

மூலக்கதை