விவசாயிகளின் பலி எண்ணிக்கை...அதிகரிக்கிறது! இழப்பீடு வழங்க நடவடிக்கை தேவை

தினமலர்  தினமலர்
விவசாயிகளின் பலி எண்ணிக்கை...அதிகரிக்கிறது! இழப்பீடு வழங்க நடவடிக்கை தேவை

கடலுார்: பருவமழை பொய்த்துப் போனதால் நடவு செய்த நெற்பயிரைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டதே என்கிற மனஉளைச்சலில் மாவட்டத்தில் இதுவரை 10 பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு பருவமழை பெய்யாமல் பொய்த்துப் போனது. கடலுார் மாவட்டத்தில் சராசரியாக பெய்யும் பருவமழையில் 10 சதவீதம் மட்டுமே பெய்துள்ளது. மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கரில் நடவு செய்திருந்த நெற்பயிர்கள் தண்ணீரின்றி காய்ந்து கருகின.
கர்நாடகா மாநிலத்தில் இருந்து காவிரி தண்ணீர் திறந்து விடாததால் ஏரி, குளம், வாய்க்கால் தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது. காவிரி டெல்டா பகுதியில் காவிரி தண்ணீரை நம்பியே சம்பா நெல் பயிர் செய்த விவசாயிகளின் வயல்கள் வெடிப்போடியது. நிலத்தில் உழைத்து ஓடாய் தேய்ந்த விவசாயிகளுக்கு சம்பா போக நெல் மட்டுமே வாழ்வில் ஒளியேற்றக் கூடியதாக இருந்தது. அந்த வருவாயும் கிடைக்கவில்லையென்றால் உழவு, நடவு செலவு, உரம் போன்ற பல்வேறு செலவுகளை செய்துவிட்ட விவசாயிகள் மனதேனை அடைந்துள்ளனர்.நடவு செய்த பயிரை காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் பலர் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்ட அவலம் இந்த ஆண்டில்தான் நடந்தது.
தண்ணீரின்றி பயிர் கருகுவதை பார்த்த விவசாயிகள் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். வாங்கிய கடனை எப்படி வட்டியுடன் திருப்பிச் செலுத்துவது, மீண்டும் வாழ்க்கையை ஓட்ட தேவையான குறைந்தபட்ச ஊதியத்திற்கு எங்கே செல்வது என்கிற வேதனையில் பல விவசாயிகள் மாரடைப்பு காரணமாக இறந்தனர். இன்னும் சிலர் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர்.
கடலுார் மாவட்டத்தை பொறுத்தவரை காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த ஆழங்காத்தான், குமராட்சி செந்தமிழன், நெய்வாசல் பாலையா, வீரநத்தம் கமலாம்பாள், விருத்தாசலம் மனவாள நல்லுார் மாந்துரை, பண்ருட்டி வீரபெருமாநல்லுார் சங்கர், மனம்தவழ்ந்தபுத்துார் ராஜகோபால், கயபாக்கம் பாலமுருகன், புவனகிரி வயலாம்பூர் குமார் உட்பட இதுவரை 10 பேர் இறந்துள்ளனர். இனியும், விவசாயிகளின் தற்கொலைகள் தொடரக்கூடாது. தமிழக அரசு தற்கொலை செய்து கொண்டவர்களின் நிலத்தை ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

மூலக்கதை