சாலைகளை தோண்ட அனுமதி கேட்டு நிறுவனங்கள்...அணிவகுப்பு! புதிதாக போட்டவை என்பதால் மாநகராட்சி தயக்கம்

தினமலர்  தினமலர்
சாலைகளை தோண்ட அனுமதி கேட்டு நிறுவனங்கள்...அணிவகுப்பு! புதிதாக போட்டவை என்பதால் மாநகராட்சி தயக்கம்


சென்னையில், பல்வேறு பகுதிகளிலும், பராமரிப்பு மற்றும் புதிய கேபிள் பதிக்க, சாலைகளை தோண்டுவதற்கு அனுமதி கேட்டு, தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. ஆனால், புதிதாக போடப்பட்ட சாலைகள் என்பதால், அனுமதி தர மாநகராட்சி தயக்கம் காட்டி வருகிறது.
சென்னை மாநகராட்சி, 471 பேருந்து சாலைகள், 33 ஆயிரத்து, 500 உட்புற சாலைகளை பராமரித்து வருகிறது. மாநகராட்சி, ஒவ்வொரு ஆண்டும், சாலை பணிகளுக்கு, 150 முதல், 400 கோடி ரூபாய் வரை செலவழித்தாலும், புதிதாக போடப்பட்ட சாலைகள், சில மாதங்களில், ஏதாவது ஒரு பணிக்காக தோண்டப்படுகின்றன.
கேபிள் பதிப்புஇதனால், புதிய சாலைகளில், சாலை வெட்டு பணிக்கு அனுமதி அளிக்க, சமீப காலமாக மாநகராட்சி அதிகம் யோசிக்கிறது. 'வடகிழக்கு பருவமழை காலமான, அக்டோபர் முதல் ஜனவரி வரை, எந்த சாலை வெட்டு பணிக்கும் மாநகராட்சி அனுமதி கிடையாது' என அறிவித்திருந்தது.தற்போது, பருவமழை காலம் முடிவுக்கு வந்து விட்டதால், அடுத்தடுத்து பராமரிப்பு மற்றும் புதிய கேபிள் பதிக்கும் பணிகளுக்கு, தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களும், குடிநீர் வாரியம், மின் வாரியம், பி.எஸ்.என்.எல்., உள்ளிட்ட சேவை துறைகளும் தயாராகி விட்டன.
இத்துறைகள் சார்பில், எந்தெந்த சாலைகளில், சாலை வெட்டு பணிக்கு அனுமதி வேண்டும் என, நீண்ட பட்டியலே மாநகராட்சியிடம் கொடுக்கப்பட்டுள்ளது.இதுவரை, 1,000 சாலைகளில், சாலை வெட்டு அனுமதிக்கு விண்ணப்பித்து, வடகிழக்கு பருவமழை காலம் என்பதால், அனுமதி தராமல் மாநகராட்சி தட்டிக்கழித்து வந்தது.இந்நிலையில், பல தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள், '4ஜி' சேவைக்காக, கேபிள் பதிக்க, 50க்கும் மேற்பட்ட புதிய சாலைகளை தோண்ட, மாநகராட்சியிடம் பட்டியல் அளித்துள்ளன. இந்த சாலைகள், சமீபத்தில் போடப்பட்டவை என்பதால், அனுமதி அளிக்கும் விஷயத்தில் மாநகராட்சி கையை பிசைந்து நிற்கிறது.
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:'வர்தா' புயலால் பல்வேறு பகுதிகளிலும் தொலை தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், அவற்றை சீரமைக்க, அதிகளவில் சாலை வெட்டு பணிக்கு, தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் அழுத்தம் தருகின்றன.
அவசிய பணிக்கு, சாலை வெட்டு அனுமதி வழங்கி தான் ஆக வேண்டும். எந்தெந்த பணிகள் அவசியம் என ஆலோசித்த பின்னே, இதில் முடிவு செய்வோம். நிச்சயமாக, புதிய சாலைகளை ஓராண்டிற்குள் தோண்ட அனுமதி கிடையாது.இவ்வாறு அவர் கூறினார்.
முறையான அனுமதிதனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள், மாநகராட்சியிடம் முறையான அனுமதி பெற்று, 1,000 சாலைகளை தோண்டினால், ஒவ்வொரு பகுதியிலும், அந்த பகுதி அளவில் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்களை சரிக்கட்டி, அதே எண்ணிக்கையில் அனுமதி பெறாமல், சாலையை தோண்டுவதும் நடந்து வருகிறது. இதை, மாநகராட்சி உயர் அதிகாரிகள் கவனமாக ஆராய வேண்டும் என்பதே நகர வாசிகளின் விருப்பம்.

மூலக்கதை