சரக்கு விமானம் விழுந்து கிர்கிஸ்தானில் 32 பேர் பலி

தினமலர்  தினமலர்
சரக்கு விமானம் விழுந்து கிர்கிஸ்தானில் 32 பேர் பலி

பிஷ்கேக்: துருக்கி நாட்டைச் சேர்ந்த சரக்கு விமானம், மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தானில் உள்ள கிராமத்தில் விழுந்து நொறுங்கியது; இதில், கிராமவாசிகள் உட்பட, 32 பேர் உயிரிழந்தனர்.மேற்கு ஆசிய நாடான துருக்கியைச் சேர்ந்த சரக்கு விமானம், ஹாங்காங்கில் இருந்து இஸ்தான்புலுக்கு, கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக் வழியாக சென்றது.நேற்று முன்தினம் அதிகாலையில், இந்த விமானத்தை, பிஷ்கேக் விமான நிலையத்தில் தரையிறக்க, விமானிகள் முயற்சித்தனர். கடும் பனிமூட்டமாக இருந்ததால், பாதை சரியாக தெரியாமல், அருகில் உள்ள கிராமத்தில், இந்த விமானம் விழுந்து நொறுங்கியது.இதில், அந்த கிராமத்தில் உள்ள, 45க்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த சேதமடைந்தன. அதிகாலையில் நடந்த இந்த சம்பவத்தில், நான்கு விமானிகள் உயிரிழந்தனர். வீடுகளில் துாங்கிக் கொண்டிருந்த கிராமவாசிகள், 28 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.விமானம் விழுந்து மோதியதில், கட்டடங்கள் இடிந்து விழுந்ததுடன், தீப்பற்றிக் கொண்டன. தீயை அணைக்கும் பணி, பல மணி நேரம் நடந்தது. 'இடிபாடுகளில் பலர் சிக்கி இருக்கலாம், அதனால் உயிர் பலி மேலும் அதிகமாக இருக்கலாம்' என, கிர்கிஸ்தான் போலீசார் அஞ்சுகின்றனர்.

இந்த விபத்தைத் தொடர்ந்து, விமான நிலையம் மூடப்பட்டது. கிர்கிஸ்தான் அதிபர், அல்மாஸ்பெக் அடம்பயேவ், தன் சீனப் பயணத்தை ரத்து செய்து, நாடு திரும்பியுள்ளார்.

மூலக்கதை