சி.ஐ.ஏ., இயக்குனர் மீது டிரம்ப் அதிரடி புகார்

தினமலர்  தினமலர்
சி.ஐ.ஏ., இயக்குனர் மீது டிரம்ப் அதிரடி புகார்

வாஷிங்டன்: ''அமெரிக்க அதிபர் தேர்தலில், ரஷ்யா திரைமறைவு வேலைகளில் ஈடுபட்டதாக கூறப்படும் புகாரின் பின்னணியில், அமெரிக்க உளவு அமைப்பான, சி.ஐ.ஏ., தலைவர், ஜான் பிரின்னன் இருக்கிறார்,'' என, டொனால்டு டிரம்ப் அதிரடியாக குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவில், கடந்த நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சியின் சார்பில், ஹிலாரியும், குடியரசு கட்சி சார்பில், டொனால்டு டிரம்பும் போட்டியிட்டனர். இதில், ஹிலாரி வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டிரம்ப் வெற்றி பெற்றார்; ஜனவரி 20ல், அவர் பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது, ஹிலாரியை தோற்கடிப்பதற்காக, ஜனநாயக கட்சி தலைவர்களின் மின்னஞ்சலில், ரஷ்யா உளவுத்துறையினர் ஊடுருவி, தகவல்களைத் திருடி வெளியிட்டதாக, அமெரிக்க உளவு அமைப்பான, சி.ஐ.ஏ., குற்றஞ்சாட்டி வருகிறது. இதுபற்றி, அமெரிக்க பார்லிமென்ட், விசாரணை நடத்த உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, சி.ஐ.ஏ.,வின் தலைவர், ஜான் பிரின்னனும், டொனால்டு டிரம்பும், ஒருவரையொருவர் விமர்சித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து, சி.ஐ.ஏ., இயக்குனர், ஜான் பிரின்னன் மீது, நேற்று, டிரம்ப் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் கூறியதாவது:அமெரிக்க அதிபர் தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு இருப்பதாக வெளியான தகவலின் பின்னணியில், சி.ஐ.ஏ., இயக்குனர், ஜான் பிரின்னன் இருக்கிறார். எந்தவித ஆதாரமும் இன்றி, தகவல்களை உறுதி செய்யாமல், எனக்கு எதிராக பொய்யான தகவல்களை, அவரது உத்தரவின் பேரில், சி.ஐ.ஏ., பரப்பி வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை