வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் :காட்டுமாடுகள் தோட்டங்களில் புகுவதால் அவசியம்

தினமலர்  தினமலர்

நத்தம்:நத்தம் வட்டார வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால் மலையடிவார தோட்டங்களில் காட்டு மாடுகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன. இப்பகுதியில் அழகர்மலை, லிங்கவாடி மலை, கரந்தமலை, சிறுமலை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் காட்டு மாடுகள் அதிக அளவில் வசிக்கின்றன. கடந்த 3 ஆண்டுகளாக மழைப்பொழிவு 50 சதவீதத்திற்கும் மேல் குறைந்து விட்டது. இந்த ஆண்டும் பருவமழை முற்றிலும் ஏமாற்றி விட்டது.
மலைப்பகுதியில் உள்ள சிற்றோடைகள், குட்டைகள் வறண்டு விட்டன. சில மாதங்களுக்கு முன்பு லிங்கவாடி மலையூரில் தண்ணீர் தேடிவந்த 7 காட்டு மாடுகள் கூட்டம் மொட்டுக்கிணற்றில் தவறி விழுந்ததில் 3 பலியாகின. இது போன்ற சம்பவங்கள் நத்தம் பகுதியில் அடிக்கடி நடக்கின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் மலையடிவாரங்களில் உள்ள மாந்தோப்பு உள்பட தோட்டங்களில் காட்டு மாடுகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
எனவே மாடுகள் இறங்கும் வழித்தடங்களை கண்டறிந்து வனப்பகுதிக்குள் தொட்டிகள் அமைக்க வேண்டும். இதன்மூலம் விலங்குகள் கீழே இறங்காத வகையில் தண்ணீர் நிரப்ப வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சாணார்பட்டி ஒன்றியம் கவராயபட்டி, தவசிமடை, மொட்டையக்கவுண்டனுார், நத்தம் லிங்கவாடி, முளையூர், பட்டணம்பட்டி பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

மூலக்கதை