வழிகாண்போமே... அங்கீகாரம் நிலத்தை விற்க வழி இல்லை:பத்திரபதிவு சிக்கலால் தவிக்கும் மக்கள்

தினமலர்  தினமலர்

சாத்துார்;விருதுநகர் மாவட்டத்தில் அங்கீகாரம் பெற்ற நிலத்தை கூட வாங்க , விற்க முடியாது , பத்திரபதிவு துறை அதிகாரிகளின் கெடுபிடியால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இதன் மூலம் பணபுழக்கம் குறைந்து தொழில்வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் பட்டாசு, தீப்பெட்டி, நிப்புகம்பெனி, டெக்ஸ்ஸ்டைல்மில்கள், அட்டைக்கம்பெனிகள் மற்றும் பேன்டேஜ் துணி உற்பத்தி போன்ற தொழில்கள் உள்ளன. இது போன்றே ரியல் எஸ்டேட் தொழிலும் கால் ஊன்றி கோலோச்சி வந்தது. மாவட்டத்தில் மழை பொழிவு குறைந்த போனதால் கடந்த பல ஆண்டுகளாக விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது.
புதியதாக ஆலைகள்
இந்நிலையில் பட்டாசு ஆலைகள், தீப்பெட்டி தொழிற்சாலைகள், மில்கள் அமைக்க என மானாவாரி விவசாய நிலங்களை விவசாயிகள் விற்பனை செய்ய துவங்கினர். விவசாயம் பாழ்பட்டாலும் புதியதாக தோன்றிய ஆலைகள் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வந்தன. இந்நிலையில் விவசாயம்செய்யாத நிலங்களை பிளாட்டு போட்டு விற்பனை செய்பவர்கள் வாங்கி, அவற்றை விற்பனை செய்ய தொடங்கினர். இதனால் மக்கள் கையில் பணபுழக்கம் அதிகரித்து பல வணிக வளாகங்கள் உருவாகின. மேலும் புதியதாக குடியிருப்பு பகுதிகளும் உருவாகின.
தொழிலில் வளர்ச்சி
நகரம், கிராமம் என்ற வேறுபாடு இன்றி பெரிய கட்டடங்களும் கிராமபுறங்களிலும் உருவாகின. சுத்தமான காற்று மற்றும் தண்ணீர் வசதிக்காக விவசாயநிலங்களில் போடப்பட்ட பிளாட்டுகளை பலர் வாங்கி வீடுகள் கட்டி குடியேறிவந்தனர். இதன் மூலம் புதியதாக வீடுகள் கட்டி விற்பனை செய்யும் தொழிலும் வளர்ச்சியடைந்தது. கட்டட தொழிலாளர்களுக்கும் வேலை வாய்ப்பு ஏற்பட்டது. இதனால் சாத்துார், சிவகாசி, விருதுநகர், ராஜபாளையம், அருப்புக்கோட்டை பகுதிகளில் பொருளாதாரம் வளர்ச்சி பெற்றது. நிலத்தின் மதிப்பும் வேகமாக உயர்ந்தது. தற்போது நீதிமன்றத்தின் உத்தரவால் உள்ளாட்சி அமைப்புகளின் அங்கீகாரம் பெற்ற மனைகளை கூட விற்பனை செய்ய முடியாமல் பதிவுத்துறை அதிகாரிகள் கெடுபிடியால் மக்கள் தவிக்கின்றனர். இதன் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .
பலரும் தவிப்பு
சாத்துார் கே.விஜயகுமார், “விவசாய நிலங்கள் விளைநிலங்களாக மாறுவதை தடுக்க அங்கீகாரமில்லாத மனைப்பிரிவுகளை பதிவு செய்ய நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. உள்ளாட்சிகளால் அங்கீகாரம் செய்யப்பட்ட மனை பிரிவுகளுக்கு தடை விதிக்கவில்லை. ஆனால் பதிவுத்துறை அதிகாரிகள் அங்கீகாரம் பெற்ற மனைகளையும் விற்க பதிவு செய்ய மறுக்கின்றனர். திருமணம், வாங்கியகடனை திருப்பி செலுத்துவதற்காக நிலத்தை விற்பனை செய்ய முடியாமல் பலரும் தவிக்கின்றனர். இதனால் பொதுமக்களிடம் பணப்புழக்கம் குறைந்து மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். உள்ளாட்சிகளுக்கு வரும் வருவாயும் பாதிக்கிறது,”என்றார்.

மூலக்கதை