குமுளி மலைப்பாதையில் மண் அரிப்பு...சீரமைக்கப்படவில்லை: விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்

தினமலர்  தினமலர்

கூடலுார்;குமுளி மலைப்பாதையில் மண் அரிப்பு ஏற்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்துடனேயே பயணிக்கின்றனர். லோயர்கேம்பில் இருந்து குமுளி வரையுள்ள 6 கி.மீ., துார மலைப்பாதை பல ஆபத்தான வளைவுகளைக் கொண்டதாகும். தமிழகத்தையும் கேரளாவையும் இணைக்கும் முக்கிய பாதையாக என்பதால் போக்குவரத்து அதிகமாக இருக்கும். சபரிமலை சீசனில் கூடுதலாக ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் வரும்.
இந்த மலைப்பாதையில் பென்னிகுவிக் மணி மண்டபம் அருகே, கடந்த 2014 ல் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு காரணமாக, மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால் ஒரு வாகனம் மட்டுமே செல்லும் வகையில் பாதை இருந்தது. மலைப்பாதையின் வளைவில் இந்த மண் அரிப்பு ஏற்பட்டதால், வாகனங்கள் அப்பகுதியில் வரும் போது, திடீரென பிரேக் போடும் நிலை இருந்தது. மேலும் அந்த இடத்தில் 50 அடிக்கும் மேல் பள்ளம் உள்ளது. இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது.
மலைப்பாதையை சீரமைக்க வனத்துறையினர் அனுமதி மறுப்பதாக திண்டுக்கல்- குமுளி தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் காரணத்தைக்கூறி கடந்த 2 ஆண்டாக சீரமைக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். ஆனால் சாலையை சீரமைக்க எவ்வித எதிர்ப்பும் இல்லை என வனத்துறையினர் கூறி வருகின்றனர். இரு துறையினருக்கும் ஏற்பட்டுள்ள பிரச்னையால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே பயணிக்கும் சூழ்நிலை உள்ளது. மிகப்பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன் மலைப்பாதையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூலக்கதை