குடிநீர் கிடைக்காமல் தினசரி மக்கள் தவிப்பு:காவிரி தண்ணீரில் ஊரணி நிறைகிறது

தினமலர்  தினமலர்

ராமநாதபுரம்;ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் தினம் தினம் தவிக்கும் நிலையில் காவிரி தண்ணீரில் ஊரணியை நிறைக்கின்றனர்.மாவட்டத்தில், கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவிய நிலையில், பருவ மழையை நம்பி இருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. மக்களின் குடிநீர் தேவைக்காக காவிரி குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டாலும், அது முழு பலனை தரவில்லை.
மாவட்டத்தில் 50 சதவீதம் கிராமங்களில் இன்னும் காவிரி குடிநீர் கிடைத்தபாடில்லை. ஏரிகள், கண்மாய்கள், ஊரணிகள் வறண்டதால் நிலத்தடி நீராதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, நிலத்தடி நீர் நன்னீராக இருந்த இடங்களில் கூட மழை இல்லாததால் தற்போது உப்பு நீராகி வருகிறது.
மாவட்டத்தில் நுாற்றுக்கணக்கான இடங்களில் காவிரி குடிநீர் பைப்லைனில் கசிவு, உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. அவற்றில் மக்கள் குளிப்பதோடு, வாகனங்களை சுத்தம் செய்கின்றனர். பல இடங்களில் ரோட்டோரங்களில் குளம் போல் தேங்கி நிற்கிறது.
ராமநாதபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் ஆர்.எஸ்.மடை கிராமத்தில் காவிரி குடிநீர் குழாயில் தொட்டி அமைத்து குளிக்கின்றனர். மேலும், இவ்வழியாக செல்லும் குடிநீர் மெயின் குழாயை உடைத்து புதிதாக அமைக்கப்பட்ட ஊரணிக்கு தண்ணீர் கொண்டு செல்கின்றனர்.ஊரணிக்குள் மோட்டார் வைத்து தண்ணீர் பாய்ச்சுவது போல் வெள்ளம் பாய்கிறது. தற்போது, ஊரணியில் பாதியளவு நிறைந்து விட்டது. இந்த தண்ணீரில் அப்பகுதி மக்கள் குளிக்கின்றனர்.தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைக்காமல் பல கிராமங்களில் மக்கள் தவிக்கின்றனர். காலி குடங்களுடன் தள்ளுவண்டிகளில் பல கி.மீ., செல்கின்றனர். ஆனால், குடிநீரை இப்படி வீணடிப்பதால், கிராமங்களுக்கு சரிவர கிடைப்பதில்லை. குடிநீர் தட்டுப்பாடு அபாயத்தில் மாவட்டம் உள்ள நிலையில், கிடைக்கும் குடிநீரை இப்படி வீணடிப்பது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். ஆர்.எஸ்.மடை பகுதி மக்களுக்கு குளிப்பதற்கும் பிற தேவைகளுக்கும் தண்ணீர் வசதி செய்து கொடுக்க வேண்டும்.
ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. குடிநீர் குழாய்களை உடைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் 88 இடங்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளன,” என்றார்.

மூலக்கதை