போலீஸ் தடையை மீறி வாடிவாசலுக்குள் நுழைய முயற்சி- குண்டுகட்டாக இளைஞர்கள்- மாணவர்கள் கைது

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
போலீஸ் தடையை மீறி வாடிவாசலுக்குள் நுழைய முயற்சி குண்டுகட்டாக இளைஞர்கள் மாணவர்கள் கைது

மதுரை: அலங்காநல்லூரில் வாடிவாசலுக்குள் நுழைய முயற்சித்த இளைஞர்கள், மாணவர்கள் குண்டுகட்டாகவும் தரதரவெனவும் போலீசாரால் வலுக்கட்டாயமாக கைது செய்ததால் பதற்றம் ஏற்பட்டது.

உச்சநீதிமன்ற தடையால் ஜல்லிக்கட்டு விதிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூரில் எப்படியும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்துவோம் என இளைஞர்கள் அறிவித்திருந்தனர்.

இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அலங்காநல்லூரில் குவிந்தனர். தடையை மீறி ஒருசில காளைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.

பின்னர் பிரமாண்ட பேரணி ஒன்று நடத்தப்பட்டது. அப்போது இளைஞர்கள் வாடிவாசலை நோக்கி முன்னேற முயற்சித்தனர். ஆனால் போலீசார் தடியடி நடத்தினர்.

இதைத் தொடர்ந்தும் திடீரென ஒரு பேரணி நடத்தப்பட்டு அமைதியாக கலைந்து சென்றது. பின்னர் மதுரையில் இருந்து மாணவர்கள் குழு ஒன்று ஆவேசமாக அலங்காநல்லூருக்குள் களமிறங்கியது.

போலீசாரின் தடையை மீறி வாடிவாசல் செல்வோம் என பேரணியாக முழக்கமிட்டு வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

தர்ணா போராட்டம் நடத்தியவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தி வந்தனர். ஆனால் மாணவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். இதையடுத்து அவர்கள் குண்டு கட்டாகவும் தரதரவெனவும் இழுத்து செல்லப்பட்டு போலீஸ் வேனில் தள்ளிவிடப்பட்டனர்.

இதனால் மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

 

மூலக்கதை