தடை, கெடுபிடிகளையும் மீறி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு: போலீசுக்கு தண்ணி காட்டி இளைஞர்கள் உற்சாகம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தடை, கெடுபிடிகளையும் மீறி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு: போலீசுக்கு தண்ணி காட்டி இளைஞர்கள் உற்சாகம்

மதுரை: நீதிமன்ற தடை, கடும் கெடுபிடிகளையும் மீறி, போலீசுக்கு தண்ணி காட்டி விட்டு, அலங்காநல்லூரில் இன்று காலை 9 மணியளவில் ஜல்லிக்கட்டு காளை அவிழ்த்து விடப்பட்டது. மைதானத்தில் பாய்ந்து சீறிய காளையை அடக்க வந்த இளைஞர்களுக்கும், போலீசாருக்கும் போக்கு காட்டிவிட்டு வெற்றி நடை போட்டு சென்றது. மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றது.

ஆண்டுதோறும் தை மாதம் 3ம் தேதி (மாட்டுப்பொங்கலுக்கு மறுநாள்) அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடக்கும்.   உச்ச நீதிமன்ற தடையால் கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இதனால் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் பகுதி மக்கள் கடும் கொந்தளிப்பில் இருந்தனர். இந்நிலையில், இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக கடந்த ஒரு மாதமாக தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

சென்னை மெரீனாவில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பேரணி சென்றனர். மதுரையில் கடந்த 10 நாட்களாகவே கல்லூரி மாணவ, மாணவிகள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள் தொடர்ந்து மறியல், முற்றுகை, உண்ணாவிரதம் என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இதனால் மதுரை மாவட்டம் முழுவதும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
பொங்கல் திருநாளில் அவனியாபுரத்தில் 10க்கும் மேற்பட்ட காளைகளை அவிழ்த்து விட்டு இளைஞர்கள், போலீசாருக்கு ‘தண்ணி’ காட்டினர். தொடர்ந்து மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆங்காங்கே தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தது.

ஒரு சில இடங்களில் ஜல்லிக்கட்டை வெற்றிகரமாக நடத்தி, காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. நேற்று பாலமேட்டிலும் அடுத்தடுத்து 6 கோயில் காளைகளை இறக்கி, பொதுமக்கள் வெற்றிகரமாக ஜல்லிக்கட்டை நடத்தினர்.

இதனால் உஷாரான போலீசார், அலங்காநல்லூர் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

வாடிவாசல் பகுதியில்  போலீசார் குவிக்கப்பட்டனர். அலங்காநல்லூர் வரும் வழித்தடங்கள் அனைத்திலும் சோதனைச்சாவடிகள் அமைத்து, அனைத்து சாலைகளையும் ‘சீல்’ வைத்தனர்.

இருப்பினும் போலீசாரின் கெடுபிடிகளை மீறி, தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கடந்த 2 நாட்களாக அலங்காநல்லூருக்கு வந்த வண்ணம் இருந்தனர். அலங்காநல்லூரில் கூட்டத்தை கலைக்க வஜ்ரா உள்ளிட்ட போலீஸ் வாகனங்களும், அதிரடிப்படை வீரர்களும் குவிக்கப்பட்டனர்.

பீட்டா அமைப்பு மற்றும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அலங்காநல்லூர் பகுதியில் கடைகளை அடைக்கப்பட்டன. வீடுகள், கடைகளில் கருப்பு கொடிகளை ஏற்றி மக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். பதற்றமான சூழ்நிலையில் இன்று காலை முனியாண்டி, விநாயகர் கோயில், அரியமலை சாமி, முத்தாலம்மன் மற்றும் காளியம்மன் என 5 கோயில் காளைகளை வாடிவாசல் பூஜைக்கு ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் அழைத்து வந்தனர்.

போலீசார் அனுமதி மறுத்ததால் பதற்றம் மேலும் அதிகரித்தது. போலீசாரின் எதிர்ப்பையும் மீறி, கோயில் காளைகளை பூஜைக்கு அழைத்து செல்வதாக கூறி, வாடிவாசலுக்கு அழைத்து சென்றனர்.

அங்கு பூஜையும் செய்தனர்.

பூஜை முடிந்ததும் அருகே இருந்த ஒரு சந்துக்குள் இருந்து திடீரென ஒரு ஜல்லிக்கட்டு காளையை இளைஞர்கள் மைதானத்தில் அவிழ்த்து விட்டனர். கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களின் கரகோஷம், விசில் சத்தம் விண்ணைப் பிளக்க, களத்தில் அந்தக் காளை நின்று ஆடியது.

அடக்கப் பாய்ந்த 2 இளைஞர்களை சிலுப்பி எறிந்தது. 10 நிமிடங்கள் வரை மைதானத்தில் வீரநடை போட்டு அந்தக் காளை சுற்றி வந்தது.

பின்னர் வெற்றியுடன் மைதானத்தில் இருந்து வெளியேறியது. காளையை பிடிக்க முடியாமலும், களத்தில் இறங்கிய மாடுபிடி வீரர்களை தடுக்க முடியாமலும் போலீசார் திகைத்தனர். காளை வெளியேறியதும், மீண்டும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இருப்பினும் அடுத்தடுத்து காளைகளை அவிழ்த்து விட இளைஞர்கள் ஆர்வமாக பரபரத்துக் கொண்டிருந்தனர். இதையடுத்து வாடிவாசல் அருகே போலீஸ் அதிகாரிகள், ஊர் பெரியவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். மற்றொருபுறம் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி, திடீரென ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வாடிவாசல் அருகே ஏராளமான பெண்கள் உட்பட பொதுமக்கள் அமர்ந்து, திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மைதானத்தில் கூடியிருந்த பொதுமக்கள் கூறுகையில், ``400 ஆண்டுகளுக்கு முன்பு, 4 காளைகளை வைத்து   இங்கு ஜல்லிக்கட்டு நடந்துள்ளது.

அதே சூழ்நிலை தற்போது நிலவி வருகிறது.   ஜல்லிக்கட்டு நடத்த மத்திய, மாநில அரசுகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எம்எல்ஏ, எம்பிக்கள், அமைச்சர்களை காணவில்லை.

ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்காத அமைச்சர்கள், அதிகாரிகளை கண்டித்து எங்கள் போராட்டம் தொடரும்’’ என்றனர். எஸ்பி. விஜயேந்திர பிதாரி கூறுகையில்,’ ``அலங்காநல்லூர் பகுதியில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று பாலமேடு பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்தியது தொடர்பாக 16 பேரை கைது செய்து, சிறையில் அடைத்துள்ளோம். இன்றும் கைது நடவடிக்கை தொடரும்’’ என்றார்.

சேலத்திலும் ஜல்லிக்கட்டு :  சேலம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தம்மம்பட்டி ஜல்லிக்கட்டு இன்று தடையை மீறி நடந்தது.

இன்று அதிகாலை அப்பகுதியில் தம்மம்பட்டி, நாகியாம்பட்டி, உலிபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள், 50 காளைகளுடன் கூடினர். பின்னர் அப்பகுதியில் வாடிவாசல் அமைத்து காளைகளை அவிழ்த்து விட்டனர்.

சீறிப்பாய்ந்த காளைகளை இளைஞர்கள் ஆர்வத்துடன் அடக்க முயன்றனர். ஜல்லிக்கட்டு நடப்பது குறித்து தம்மம்பட்டி போலீசுக்கு தகவல் ஓடி வந்தனர்.

அவர்கள் வருவதற்கு முன்னதாகவே அப்பகுதியில் கூடியிருந்த மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதையடுத்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் பல்வேறு கிராமங்களில் எருதாட்டம் நிகழ்ச்சியும் தடையை மீறி நடந்தது.

.

மூலக்கதை