காணும் பொங்கல் கொண்டாட்டம் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
காணும் பொங்கல் கொண்டாட்டம் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

சென்னை: காணும் பொங்கலையொட்டி மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர். சுற்றுலாத் தளங்களும் நிரம்பி வழிந்தன.

பொங்கல் விழாவின் கடைசி நாள் கொண்டாட்டமான காணும் பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னையின் முக்கிய சுற்றுலா தலங்களான மெரினா கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, திரையரங்குகள், ஷாப்பிங் மால், உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் இன்று காலை முதலே அலைமோதியது.

நேற்று வீடுகளில் பொங்கல் பண்டிகையை கொண்டியவர்கள் அதிகாலை எழுந்து தங்களுக்கு தேவையான உணவை தயாரித்து கொண்டனர். பின்னர் காலையிலே தங்கள் குடும்பத்தினருடன் உற்சாகமாக கடற்கரை மற்றும் சுற்றுலா பகுதிகளுக்கு புறப்பட்டனர்.

இதனால் காலை முதலே காணும் பொங்கல் களைகட்ட தொடங்கியது. மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை பகுதிகளக்கு சென்னை மட்டுமல்லாமல் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்தும் வாகனங்களில் பொதுமக்கள் படையெடுத்து வந்தனர்.

போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவிடாத வகையில் வாகனங்களை நிறுத்துவதற்கு போலீசார் ஏற்பாடு செய்தனர். அதற்கு ஏற்றவாறே வாகனங்கள் சென்னை நகருக்குள் அனுமதிக்கப்பட்டது.
 மெரினா கடற்கரைக்கு லேசான வெயிலுடன் கூடிய ஜல்லென்ற குளிர்காற்று வீசியதால் பொதுமக்கள் காலை முதலே குடும்பம் குடும்பமாக வரத் தொடங்கினர்.

இதற்காக பொதுமக்கள் சாலையில் இருந்து கடற்கரை பகுதிக்கு செல்லும் வகையில் கூட்டத்தை கட்டுப்படுத்தவும் உழைப்பாளர் சிலையில் இருந்து காந்தி சிலை வரை 10 வழிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் யாரும் கடலில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடையை மீறி யாராவது கடலில் குளிக்க முற்சிப்பதை தடுக்கும் வகையில் தடுப்பு வேலிகள் போடப்பட்டுள்ளது. மேலும் குதிரைப்படை வீரர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.



 மேலும் மணலில் வேகமாக செல்லும் ரோந்து வாகனம் மூலம் கடற்கரை முழுவதும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்காத வகையில் கடுமையான ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதையும் தாண்டி யாராவது கடல் அலையில் சிக்கினால் அவர்களை மீட்பதற்காக நீச்சல் வீரர்களும், படகுகளுடன் மீனவர்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதுதவிர ஆங்காங்கே கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து போலீசார் பைனாகுலர் மூலம் கண்காணித்து வருகின்றனர்.


 காலை 11 மணி அளவிலே பெசன்ட் நகர் கடற்கரையில் மக்கள் நிரம்பி வழிந்தனர். இதுதவிர கிண்டி சிறுவர் பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

அசம்பாவித சம்பவங்களை தடுக்க அதிகளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தியேட்டர்கள், கோயில்கள், கிறிஸ்தவ தேவாலயங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

காணும் பொங்கலை முன்னிட்டு சாலையில் வாகனங்கள் செல்லும் போது டிராபிக் ஏற்படாமல் இருக்க மாற்று ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கில் திரளும் மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் வகையில் கமிஷனர் தலைமையில் கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் ஏற்பாட்டில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



கடலோர காவல்படை தயார்: மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் மொத்தம் 90 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. காணும்பொங்கல் பாதுகாப்பு பணி குறித்து கமிஷனர் ஜார்ஜ் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

காவல் துறையின் சிறப்பு கட்டுப்பாட்டு அறை காந்தி சிலை அருகே அமைக்கப்பட்டுள்ளது. கடலில் அனுமதியின்றி இறங்குபவர்களை தடுக்க கடலோர காவல் படை போலீசார், 1 ஹெலிகாப்டர், நீச்சல் தெரிந்த கடலோர காவல் படையினர் 100 பேரும், நீச்சல் தெரிந்த 100க்கும் மேற்பட்ட மீனவர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மெரினாவில் 6  கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதில், 3 போலீசார்  வாக்கி டாக்கி மற்றும் பைனாக்குலர் கண்காணிப்புடன் பணியில் இருப்பார்கள்.   20 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

குதிரைப்படை,  மணல்பரப்பில் செல்லக்கூடிய வாகனங்கள் மூலம் போலீசார் ரோந்து செல்வர்.

10  நான்கு சக்கர வாகனங்களில் ஒலி பெருக்கிகள் மூலம் பாதுகாப்பு குறித்து அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும். எலியட்ஸ் கடற்கரையில்  தேவாலயம் மற்றும் அன்னலட்சுமி கோயிலுக்கு பொதுமக்கள் அதிகம் வருவார்கள்  என்பதால் திருட்டு நடக்காமலிருக்க 70 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குழந்தைகள் கையில் டேக்: மெரினாவில் உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை அமைக்கப்பட்டுள்ள 10 நுழைவாயில்களில் இருக்கும் போலீசார், பெற்றோர்களுடைய செல்போன் எண் எழுதப்பட்ட டேக் குழந்தைகளின் கையில் கட்டி உள்ளே அனுப்புகின்றனர்.

இதனால் தவறிய குழந்தைகளை எளிதில் பெற்றோர்களிடம் ஒப்படைக்க முடியும்.

.

மூலக்கதை