டிஜெஎஸ் மெட்ரிக் பள்ளியில் மாணவர்களுடன் பொங்கல் திருவிழா

தமிழ் முரசு  தமிழ் முரசு
டிஜெஎஸ் மெட்ரிக் பள்ளியில் மாணவர்களுடன் பொங்கல் திருவிழா

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயலில் உள்ள டிஜெஎஸ் மெட்ரிக் பள்ளியில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று மாணவர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் பொங்கல் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவுக்கு டிஜெஎஸ் கல்வி குழும தலைவர் டி. ஜெ. கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் டாக்டர் பழனி, இயக்குனர் தினேஷ், நிர்வாக அலுவலர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

துணை முதல்வர் ஞானபிரகாசம் வரவேற்றார். இதைத் தொடர்ந்து, பொங்கல் பண்டிகையை ஒட்டி வகுப்பு வாரியாக அனைத்து மாணவர்களும் தங்களது ஆசிரியர்களின் துணையுடன் சூரிய கடவுளுக்கு பொங்கல் வைத்தும் பழங்கள், இனிப்புகள் வைத்தும் வணங்கினர். இந்நிகழ்ச்சியில் விவசாயத்தின் பெருமையை மாணவர்கள் உணரும் வகையில் டிராக்டர், மாடு போன்றவை அலங்கரிக்கப்பட்டு, அவற்றுக்கும் பூஜைகள் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து, தமிழக பாரம்பரிய கலைகளை எடுத்துக்கூறும் வண்ணம் மாணவர்கள் ஒயிலாட்டம், கரகாட்டம் போன்றவைகள் நடத்தி காட்டினர். இதில் கல்வி குழுமத் தலைவர் டி. ஜெ. கோவிந்தராஜன் பேசும்போது, தமிழகத்தில் ஒவ்வொருவரும் சாதி, மதம் பாராமல் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும், ஏனெனில், இது ஒட்டுமொத்த தமிழர்களின் பண்டிகை என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு சர்க்கரை பொங்கல், கரும்பு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி முடிவில் தலைமை ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

.

மூலக்கதை