காஷ்மீரில் அமைதியின்மையின் போது ஏற்பட்ட உயிரிழப்புக்கு இழப்பீடு வழங்க...

தினத்தந்தி  தினத்தந்தி
காஷ்மீரில் அமைதியின்மையின் போது ஏற்பட்ட உயிரிழப்புக்கு இழப்பீடு வழங்க...

ஜம்மு,
காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம்  9–ந்தேதி ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத் தளபதி பர்கான் வானி பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது.
பிரிவினைவாதிகளும், ஆர்ப்பாட்டக்காரர்களும் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதனால்,அங்கு ராணுவம் குவிக்கப்பட்டது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர சில இடங்களில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். ஐந்து மாதங்கள் நீடித்த இந்த வன்முறையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.  இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் இந்த பிரச்சினையை முன்வைத்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
வன்முறையில் கொல்லப்பட்டவர்களின் உறவினருக்கு ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்டப்பேரவையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். மேலும், ஆளும் பிடிபி- பாஜக கூட்டணி இந்த விவகாரத்தில் இரட்டை வேடம் போடுவதாகவும் குற்றம் சாட்டினார்.
கடந்த வாரம் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் பேசிய அம்மாநில முதல் மந்திரி மெகபூபா முப்தி, இந்த வன்முறையில்  பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்றும் நிரந்தர ஊனம் அடைந்தவர்களுக்கு  75 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தார்.ஆனால், ஆளும் கூட்டணியில் உள்ள பாஜக அரசு, தேச விரோத செயல்களை மாநில அரசு ஊக்குவிப்பதாக நேற்று அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி மாநில அரசுக்கு கண்டனம் தெரிவித்தது. இந்த விவகாரத்தை முன்வைத்து மாநில அரசு இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளதாக கூறி கடும் அமளியில் ஈடுபட்டனர்.

மூலக்கதை