ரஞ்சி கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் மும்பையை வீழ்த்தி குஜராத் அணி முதல் முறையாக...

தினத்தந்தி  தினத்தந்தி
ரஞ்சி கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் மும்பையை வீழ்த்தி குஜராத் அணி முதல் முறையாக...

இந்தூர்,

பார்த்தீவ் பட்டேல் சதம்

ரஞ்சி கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியன் மும்பை – குஜராத் அணிகள் இடையிலான இறுதிப்போட்டி இந்தூரில் நடந்து வந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே மும்பை 228 ரன்களும், குஜராத் 328 ரன்களும் எடுத்தன. 100 ரன்கள் பின்தங்கிய மும்பை அணி 2–வது இன்னிங்சில் 411 ரன்கள் குவித்து ஆல்–அவுட் ஆனது. இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 312 ரன்கள் இலக்கை நோக்கி களம் இறங்கிய குஜராத் அணி 4–வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 47 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் கடைசி நாளான நேற்று முன்தினம் தொடர்ந்து விளையாடிய குஜராத்துக்கு முதல் 3 விக்கெட்டுகள் சீக்கிரம் சரிந்தன. பன்சால் 34 ரன்னிலும், பார்கவ் மெராய் 2 ரன்னிலும், சமித் கோஹெல் 21 ரன்னிலும் வெளியேறினர்.

இதன் பின்னர் கேப்டன் பார்த்தீவ் பட்டேலும், மன்பிரீத் ஜூனேஜாவும் இணைந்து அணியின் வெற்றிப்பாதைக்கு அடித்தளமிட்டனர். ஜூனேஜா 54 ரன்களில் கேட்ச் ஆனார். சதம் அடித்து அட்டகாசப்படுத்திய பார்த்தீவ் பட்டேல் (143 ரன், 196 பந்து, 24 பவுண்டரி) வெற்றியை நெருங்கிய தருவாயில் ஆட்டம் இழந்தார்.

குஜராத் சாம்பியன்

குஜராத் அணி 89.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ரஞ்சி கோப்பையை வசப்படுத்தியது. 83 ஆண்டு கால ரஞ்சி கிரிக்கெட் வரலாற்றில் குஜராத் அணி கோப்பையை உச்சிமுகர்வது இதுவே முதல் முறையாகும். ரஞ்சி கோப்பையை வென்ற அணிகளின் பட்டியலில் 17–வது அணியாக குஜராத் இணைந்துள்ளது.

மேலும் சில சாதனைகளும் அந்த அணி படைத்தது. ரஞ்சி இறுதிப்போட்டியில் ஒரு அணி விரட்டிப்பிடித்த (சேசிங்) அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு 1937–38–ம் ஆண்டு நவாநகருக்கு எதிராக ஐதராபாத் அணி 9 விக்கெட்டுக்கு 310 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச சேசிங்காக இருந்தது. பலம் வாய்ந்த மும்பைக்கு எதிராக ஒரு அணி 300 ரன்களுக்கு மேலான இலக்கை சேசிங் செய்ததும் இது தான் முதல் நிகழ்வாகும்.

மும்பையின் 5–வது தோல்வி

46–வது முறையாக இறுதிப்போட்டியில் ஆடிய மும்பை அணி அதில் சந்தித்த 5–வது தோல்வி இதுவாகும். கடைசியாக மும்பை அணி 1990–91–ம் ஆண்டு அரியானாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் 2 ரன் வித்தியாசத்தில் மண்ணை கவ்வி இருந்தது.

இறுதி ஆட்டத்தில் இலக்கை எட்டிய இன்னிங்சில் (4–வது இன்னிங்ஸ்) அதிக ரன்கள் விளாசியவர் என்ற சாதனைக்குரியவரான பார்த்தீவ் பட்டேல் கூறுகையில், ‘குஜராத் அணிக்காக ரஞ்சி கோப்பையை வெல்ல வேண்டும் என்பது எங்கள் எல்லோரின் கனவாக இருந்தது. அது நனவாகி விட்டது. வெற்றிக்குரிய எல்லா பெருமையும் இந்த சீசனில் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர்களையே சாரும்’ என்றார்.

மூலக்கதை