தமிழர்களின் கலாசாரத்தை காப்பாற்ற வேண்டும் ‘‘ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க...

தினத்தந்தி  தினத்தந்தி
தமிழர்களின் கலாசாரத்தை காப்பாற்ற வேண்டும் ‘‘ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க...

சென்னை,

‘‘தமிழர்களின் கலாசாரத்தை காப்பாற்ற வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கூடாது’’ என்று நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

அரசியலுக்கு அழைப்பு

நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் நடந்த விருது வழங்கும் விழா நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டார். இந்த விழாவில் நடிகர் கருணாஸ் பங்கேற்று பேசும்போது, ‘‘ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். ‘‘ஏற்கனவே தங்கள் பெயர்களில் ஐந்து எழுத்துள்ளவர்கள் தமிழக முதல்–அமைச்சர்களாக இருந்து இருக்கிறார்கள். ரஜினிகாந்தின் சொந்த பெயரான சிவாஜிராவ் என்பதும் ஐந்து எழுத்துதான். விளம்பரம் இல்லாமல் நிறைய நல்ல பணிகளை செய்து வரும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்’’ என்று கருணாஸ் பேசினார்.

இதற்கு பதில் அளித்து விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:–

கருணாஸ் விசுவரூபம்

‘‘நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று நடிகர் கருணாஸ் இங்கு விசுவரூபம் எடுத்ததை பார்த்தேன். என்னை பொறுத்தவரை எப்போதும் நான் அரசியலுக்கு அப்பாற்பட்டு இருந்து இருக்கிறேன். நான் பங்கேற்கும் விழாக்களில் அனைத்து கட்சியை சார்ந்தவர்களும் கலந்துகொள்வதற்கு அவர்களின் கட்சி தலைவர்கள் தடை விதித்தது இல்லை. நான் தமிழ் மக்களை சேர்ந்தவன்.

மனதில் பட்டதை பேசும் குணம் எனக்கு உண்டு. அரசியலுக்கு என்னை அழைக்கிறார்கள். ஆனால் அரசியல் எனக்கு தெரியாது. 1996–ம் ஆண்டு நான் பேசிய ஒரு வார்த்தை தீயாக பற்றிக்கொண்டது. அப்போது அரசியலில் ஒரு மாற்றம் உருவாகும் சூழ்நிலை இருந்தது. அப்போதைய பிரதமரும் என்னிடம் இதுகுறித்து பேசி ஆதரவு கேட்டார். நான் அதற்கு உடன்படவில்லை. அரசியல் எனக்கு சரிபட்டு வராது என்றேன்.

அரசியல் தலைவர்கள்

எனது பெயரையோ புகைப்படத்தையோ யாரும் பயன்படுத்தக்கூடாது என்று சொல்லி விட்டு அமெரிக்காவுக்கு சென்று விட்டேன். அப்போது தமிழகத்தில் இருந்தும் டெல்லியில் இருந்தும் மிகப்பெரிய அரசியல் தலைவர்கள் அமெரிக்காவில் இருந்த என்னிடம் தொடர்பு கொண்டு பேசினார்கள். நீங்கள் தேர்தல் பிரசாரத்துக்கு வர வேண்டாம். ஆதரவு தருவதாக ஒரு அறிக்கை மட்டும் வெளியிட்டால் போதும். அப்போதுதான் ஒரு நல்ல அரசியல் அமையும் என்றனர்.

நீங்கள் எதுவும் சொல்லாமல் இருந்தால் உங்களை கோழை என்பார்கள் என்றனர். நான் பிச்சை எடுத்தாலும் கோழையாக இருக்கமாட்டேன். அதன்பிறகு ஒரு அரசு உருவாக ஆதரவு கொடுத்தேன். அந்த ஆட்சி நல்லது செய்கிறதோ இல்லையோ ஆதரவு கொடுத்து விட்டதால் ஐந்து வருடங்கள் அதனுடன் இருக்க வேண்டும் என்பது தர்மம்.

சிகரெட் பழக்கம்

அந்த உணர்வோடு அவர்களுடன் இருந்து விட்டு ஐந்து வருடங்கள் முடிந்ததும் வெளியே வந்து விட்டேன். அதன்பிறகு ஒரு சம்பவம் நடந்தது. சிகரெட் பிடிப்பது பற்றி பிரச்சினை வந்தது. அவர்கள் சொன்னது எனக்கு நியாயமாகவும் நல்லதாகவும் பட்டது. எனவே சிகரெட் பழக்கத்தை விட்டு விட்டேன்.

அரசியல் என்பது சாதாரண வி‌ஷயம் இல்லை. அரசியல் கட்சிகளின் தலைவர்களாக இருப்பவர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் துன்பப்படுகிறார்கள் என்பதை அவர்கள் அருகில் இருந்து பழகியதன் மூலம் தெரிந்து கொண்டு இருக்கிறேன். எந்த தலைவரும் மக்களுக்கு கெடுதல் செய்ய வேண்டும் என்று கடவுள் சத்தியமாக அரசியலுக்கு வரவில்லை.

காமராஜர்

நல்லது செய்ய வேண்டும் என்றுதான் வந்து இருக்கிறார்கள். ஆனால் அவர்களால் நல்லது செய்ய முடியாது. காரணம் நிலைமை அப்படி இருக்கிறது. இல்லாவிட்டால் காமராஜர் மாதிரி ஒரு பெரும் தலைவர் தோற்று இருக்க முடியுமா? அதை யாராவது நினைத்துத்தான் பார்க்க முடியுமா? எல்லாவற்றுக்கும் நேரம்தான். காலம்தான்.’’  இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

ஜல்லிக்கட்டு

மேலும் ஜல்லிக்கட்டு குறித்து ரஜினிகாந்த் கூறும்போது, ‘‘ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாசாரம். கலாசாரத்தில் கை வைக்கக்கூடாது. பெரியவர்கள் ஒரு கலாசாரத்தை உருவாக்கி வைத்து இருக்கிறார்கள். அதை காப்பாற்ற வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு கட்டுப்பாடு விதிக்கலாம். விதிமுறைகளை வகுக்கலாம். ஆனால் தடை விதிக்க கூடாது. ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும்’’ என்றார்.

சென்னை தேனாம்பேட்டையில் நடந்த துக்ளக் பத்திரிகை ஆண்டு விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசியதாவது:–

‘‘கே.பாலசந்தர் சினிமாவில் என்னை அறிமுகம் செய்தார். அழகு, அறிவு, திறமை இல்லாத எனக்கு தமிழக மக்கள் ஆதரவு கொடுத்தனர். நல்ல ஆன்மிக குருக்கள் கிடைத்தனர். அதோடு சோ என்ற நல்ல நண்பரும் கிடைத்தார். சோ மருத்துவமனையில் இருந்தபோது போய் பார்த்தேன். மனதுக்கு கஷ்டமாக இருந்தது.

அசாதாரண சூழல்

அவர் இறந்தபோது எதுவும் தோன்றவில்லை. ஆனால் நாள் ஆக ஆக தமிழகத்தில் நடக்கும் அசாதாரண வி‌ஷயங்கள் அரசியல் சூழ்நிலைகளை பார்க்கும்போது, இப்போது அவர் இல்லையே என்ற வருத்தம் ஏற்படுகிறது. சோ உயிருடன் இருந்தபோது ஐ.பி.எல். கிரிக்கெட் அணி பெரிய அளவில் வளர்ச்சி அடையும். எனவே சென்னை அணியை வாங்கி கொள்ளுங்கள் என்று என்னிடம் வற்புறுத்தினார்.

நான் கேட்கவில்லை. அப்போது அணிகளின் விலை சில லட்சங்கள்தான். இப்போது பல ஆயிரம் கோடி. சோவிடம் ஆலோசனை கேட்காத அரசியல் தலைவர்களே இல்லை. சோவின் பலம் அவரது உண்மை மட்டும்தான்’’.  இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

மூலக்கதை