பாதி சிகிச்சையில் வெளியேறும் நோயாளிகள் அதிகரிப்பு! அரசு மருத்துவமனையில் வசதிகள் மேம்படுமா

தினமலர்  தினமலர்
பாதி சிகிச்சையில் வெளியேறும் நோயாளிகள் அதிகரிப்பு! அரசு மருத்துவமனையில் வசதிகள் மேம்படுமா

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில், போதிய வசதிகள் கிடைக்காததால், சிகிச்சை பெறும் போது பாதியில் வெளியேறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இங்கு, கன்னியாகுமரி, நெல்லை, உள்ளிட்ட அனைத்து தென்மாவட்ட மக்களும் சிகிச்சைக்காக வருகின்றனர். உள் நோயாளிகளுக்காக 2500 படுக்கைகள் உள்ளன.
இந்நிலையில், இம்மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள், சிகிச்சை முழுமையடையும் முன், பாதியில் வெளியேறும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அவ்வாறு வெளியேறும் நோயாளிகள் அல்லது அவர்களின் உறவினர்களிடம், மருத்துவரின் அறிவுரையை மீறி செல்வதாக ஏ.எம்.ஏ., (அகைன்ஸ்ட் மெடிக்கல் அட்வைஸ்) என்ற படிவத்தில் கையொப்பம் பெறப்படுகிறது.
கடந்த ஜன., 2016 முதல் அக்., 2016 வரை இது போல் கையொப்பமிட்டு வெளியேறிய நோயாளிகள் 688 பேர். பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை பிரிவுகளில் இருந்து 400 பேரும், முட நீக்கியல் பிரிவிலிருந்து ௮௧ பேரும், நியூரோ சர்ஜரி, மகளிர் மருத்துவம் பிரிவுகளில் இருந்து 73 பேர் வெளியேறிஉள்ளனர்.
டாக்டர் ஒருவர் கூறியதாவது: சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை இங்கு வேலை செய்யும் டாக்டர்கள் இங்குள்ள வசதி குறைவுகளை சுட்டிக்காட்டி மனமாற்றம் செய்து தங்கள் சொந்த மருத்துவமனை அல்லது தாங்கள் பகுதி நேரமாக பணி செய்யும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். கமிஷன் பெற்றுக் கொண்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் மருத்துவ பணியாளர்களும் உள்ளனர்.
சிகிச்சைக்கு அதிக நாட்கள் எடுத்துக் கொள்ளுதல், இடப் பற்றாக்குறை போன்ற காரணங்களாலும் சிலர் தாமாகவே பாதியிலேயே வெளியேறி விடுகின்றனர்.இவ்வாறு வெளியேறும் நோயாளிகளை சமாதானப்படுத்தி அவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தருவதில் நிர்வாகம் ஆர்வம் காட்டுவதில்லை.

மூலக்கதை