ரஞ்சி கோப்பை கிரிக்கெட் முதல் முறையாக குஜராத் சாம்பியன்

தினகரன்  தினகரன்

இந்தூர்: மும்பை அணியுடனான ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில், 5 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற குஜராத் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. இந்தூர் ஹோல்கர் ஸ்டேடியத்தில் (மத்திய பிரதேசம்) நடந்த இப்போட்டியில், நடப்பு சாம்பியன் மும்பை அணி முதல் இன்னிங்சில் 228 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. குஜராத் முதல் இன்னிங்சில் 328 ரன் குவித்து 100 ரன் முன்னிலை பெற்றது. அடுத்து 2வது இன்னிங்சை தொடங்கிய மும்பை அணி 411 ரன் குவித்து ஆல் அவுட்டானது.இதைத் தொடர்ந்து, 312 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய குஜராத் அணி 4ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 47 ரன் எடுத்திருந்தது. நேற்று முன்தினம் நடந்த கடைசி நாள் ஆட்டத்தில் அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 313 ரன் எடுத்து (89.5 ஓவர்) வெற்றியை வசப்படுத்தியது. கோஹெல் 21, பாஞ்ச்சால் 34, மெராய் 2, கேப்டன் பார்திவ் பட்டேல் 143 ரன் (196 பந்து, 24 பவுண்டரி), ஜுனேஜா 54 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். ருஜுல் பட் 27, சிராக் 11 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.பார்திவ் பட்டேல் ஆட்ட நாயகன் விருது பெற்றார். ரஞ்சி பைனல் வரலாற்றில் வெற்றிகரமாக துரத்தப்பட்ட அதிகபட்ச இலக்கு 310 ரன் மட்டுமே (1937/38 சீசனில் ஐதராபாத் - நவாநகர்). குஜராத் அணி அந்த சாதனையை முறியத்ததுடன் முதல் முறையாக ரஞ்சி கோப்பையை முத்தமிட்டது. 1950-51 சீசனில் பைனல் வரை முன்னேறி ஹோல்கர் அணியிடம் வெற்றி  வாய்ப்பை பறிகொடுத்த குஜராத் அணி, 65 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும்  கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. 42வது முறையாக கோப்பை வெல்லும் கனவுடன் களமிறங்கிய மும்பை, 2வது இடத்துடன் திருப்தி அடைந்தது.

மூலக்கதை