மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பில் மாநகராட்சி...அலட்சியம்! உறை கிணறு திட்டத்தை 'ஊத்தி மூடிய' அதிகாரிகள்

தினமலர்  தினமலர்
மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பில் மாநகராட்சி...அலட்சியம்! உறை கிணறு திட்டத்தை ஊத்தி மூடிய அதிகாரிகள்


நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த, உறை கிணறு அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்ட திரு.வி.க., நகர் மண்டலத்தில், நீர்மட்டம் வெகுவாக உயர்ந்திருப்பது, ஆய்வில் தெரியவந்துள்ளது. உருப்படியான இந்த திட்டத்தை, மாநகராட்சி மற்ற மண்டலங்களுக்கு செயல்படுத்தாததால், நீர்மட்டம் கடுமையாக சரிந்து உள்ளது.
மழைநீர் வடிகால் இல்லாத சாலைகளில், மழைநீர் தேங்காமல் தடுக்கவும், அந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரவும் வசதியாக, 15 அடி ஆழத்திற்கு, மழைநீர் சேகரிப்புக்கு உறை கிணறு அமைக்கும் புதிய முயற்சியை மாநகராட்சி மேற்கொண்டது.
கான்கிரீட் மூடிமுதல் கட்டமாக, திரு.வி.க., நகர் மண்டலம் தேர்வு செய்யப்பட்டு, மொத்தம், 150 உறை கிணறு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. இதற்காக, சாலைகளில், 15 அடி ஆழம், 2 அடி விட்டம் கொண்ட உறை கிணறுகள் அமைக்கப்பட்டன.
களிமண் இல்லாமல், மணல் கலந்த மண் உள்ள வரை, - (10 முதல் 15 அடி ஆழம்) எடுக்கப்பட்டு, அதில் கான்கிரீட் உறை இறக்கி, கூழாங்கல், மணல் கொட்டப்பட்டது. மேல்மட்டம் கான்கிரீட் மூடி கொண்டு மூடப்பட்டது.இந்த மூடியில், ஒரு ரூபாய் நாணயம் அகலத்திற்கு, சீரான இடைவெளியில் அதிக துளைகள் இருக்கும். இந்த துளைகள் வழியாக, மழைநீர் தொட்டிக்குள் செல்லும்.
நீர்மட்டம் ஆய்வுஇந்த மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க, ஒரு தொட்டிக்கு, 15 ஆயிரம் முதல், 25 ஆயிரம் ரூபாய் வரை செலவானது. 'இந்த மழைநீர் சேகரிப்பு திட்டம், அனைத்து மண்டலங்களிலும் செயல்படுத்தப்படும்' என, மாநகராட்சி அதிகாரிகள் கூறி இருந்தனர்.
ஆனால், திரு.வி.க., நகர் மண்டலத்தோடு, இந்த உருப்படியான திட்டத்தை முடித்து கொண்டனர். இதன் விளைவு, கடந்த டிசம்பரில், அனைத்து மண்டலங்களிலும் எடுக்கப்பட்ட நிலத்தடி நீர்மட்டம் குறித்த ஆய்வில் தெரியவந்தது.
திட்டம் செயல்படுத்தப்பட்ட, திரு.வி.க.நகர் மண்டலத்தில், எந்த நீர் நிலையும் கிடையாது. ஆனால், சென்னையிலேயே இந்த மண்டலத்தில் தான் நிலத்தடி நீர்மட்டம் சிறப்பாக உள்ளது. இந்த மண்டலத்தில் நீர்மட்டம், 2.11 மீட்டராக உள்ளது. இதற்கு, அந்த கட்டமைப்பு தான் முக்கிய காரணம்.
எதிர்பார்ப்புமற்ற அனைத்து மண்டலங்களிலும் சராசரியாக, 3 முதல் 5 மீட்டர் வரை, நிலத்தடி நீர்மட்டம் சரிந்துள்ளது. கடற்கரையை ஒட்டியுள்ள சோழிங்கநல்லுார், அடையாறு மண்டலங்களில் நீர்மட்டம் பெரிதாக சரியவில்லை. ஆனால், உப்பு கலந்த நீர், இந்த மண்டலங்களில் கணிசமாக அதிகரித்துள்ளது.
தற்போது, நிலவும் கடுமையான வறட்சியால், நிலத்தடி நீரையே மக்கள் நம்ப வேண்டியுள்ளது. வீடுகள் தோறும் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்த, அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், சில ஆண்டுகளாக, அந்த திட்டத்தை யாரும் செயல்படுத்துவதில்லை. அதிகாரிகளும் கண்காணிப்பதில்லை.
இந்நிலையில், பொது இடங்களில் மழைநீர் சேகரிப்புக்கு சிறப்பு கட்டமைப்புகளை மாநகராட்சி உருவாக்கி இருந்தால், நீர்மட்டம் பாதுகாக்கப்பட்டிருக்கும்.எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, இனியாவது, இதுபோன்ற கட்டமைப்புகளை நகர் முழுவதும் உருவாக்க மாநகராட்சி முயற்சிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

மூலக்கதை