15 வீரர்களுக்கு வீர தீர விருது : பிரதமர் ராணுவ தின வாழ்த்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
15 வீரர்களுக்கு வீர தீர விருது : பிரதமர் ராணுவ தின வாழ்த்து

புதுடெல்லி: ராணுவ தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள அமர்ஜோதி ஜவான் நினைவிடத்தில் முப்படை தளபதிகள் வீர வணக்க மரியாதை செலுத்தினர். இன்று நடைபெற்ற விழாவில் 15 ராணுவ வீரர்களுக்கு வீர தீர செயல்களுக்கான விருது வழங்கப்பட்டது. நாடு விடுதலை பெற்ற பின்பு 1949ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ம் தேதி சுதந்திர இந்தியாவின் முதல் லெப்டினன்ட் ஜெனரலாக கே. எம். கரியப்பா பதவியேற்றார்.

நமது இந்திய ராணுவத்துக்கு ஒரு இந்தியரே தலைமைப் பொறுப்பேற்ற தினத்தை சிறப்பிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 15ம் தேதி ராணுவ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேசத்தை காக்கும் பணியில் ரத்தம் சிந்தி தியாகம் செய்து வரும் ராணுவத்தினரின் மேன்மையை போற்றும் வகையில் வீர வணக்கம் செலுத்தும் நாளாகவும் ராணுவ தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

ராணுவ தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தேசத்தின் இறையாண்மையை பாதுகாக்கும் பணியிலும், பேரிடர் காலத்திலும், நாட்டு மக்களுக்கு ஈடு இணையற்ற தொண்டாற்றுவதில் இந்திய ராணுவம் எப்போதும் முன்னோடியாக இருந்து வந்துள்ளது.

125 கோடி இந்தியர்கள் அமைதியான வாழ்வை நடத்திட, தங்களது இன்னுயிரை தியாகம் செய்து ராணுவ வீரர்கள் சேவையாற்றி வருகின்றனர். அவர்களின் தியாகங்களும், வீர மரணமும் பெருமிதத்துடன் இன்று நினைவு கூரப்படுகிறது.

இந்திய ராணுவ வீரர்களின் வீரத்திற்கும், அளவற்ற சேவைக்கும் தலை வணங்கி எனது வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பணியில் உள்ள வீரர்கள், ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்கு இனிய ராணுவ தின நல்வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

ராணுவ தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள அமர் ஜோதி ஜவான் நினைவிடத்தில் முப்படை தளபதிகளான ராணுவ தளபதி பிபின் ராவத், விமான படை தளபதி பி. எஸ்.

தன்னோவ், கடற்படை தளபதி சுனில் லம்பா ஆகியோர் வீர வணக்கம் செலுத்தினர்.

மேலும் ராணுவத்தில் சிறப்பான முறையில் பணியாற்றிய 15 வீரர்களுக்கு வீர தீர செயல்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டன.

.

மூலக்கதை