அரசு இன்ஜினியரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த எம்எல்ஏ

தினகரன்  தினகரன்

மோரிகோன்: அசாம் மாநிலத்தில் அரசு இன்ஜினியர் ஒருவரை தனது காலில் விழவைத்து மன்னிப்பு கேட்க செய்த எம்எல்ஏ குறித்த வீடியோ காட்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அசாம் மாநிலம், நகோன் மாவட்டத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ராஹா தொகுதி எம்எல்ஏ திம்பேஸ்வர் தாஸ் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவரது கார் அலுவலகத்துக்கு வரும் பாதையின் குறுக்கே நிறுத்தப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் அரசு இன்ஜினியரான ஜெயந்தா தாஸ் என்பவர் எம்எல்ஏவின் காரை அங்கிருந்து எடுத்து ஓரமாக நிறுத்தியதாக தெரிகிறது. ஜெய்ந்தா தாஸின் இந்த நடவடிக்கை எம்எல்ஏ மற்றும் அவரது ஆதரவாளர்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் எம்எல்ஏ திம்பேஸ்வர், இன்ஜினியர் ஜெயந்தா தாசை அழைத்து திட்டியதாக தெரிகிறது. மேலும், அவரை தன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்தததாகவும் கூறப்படுகிறது. இந்த நிகழ்வுகள் அனைத்தும் அலுவலகத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த காட்சிகள் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. ஆனால் இன்ஜினியர் தனது காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாக கூறப்படுவதை எம்எல்ஏ திம்பேஸ்வர் மறுத்துள்ளார்.

மூலக்கதை