பிரதமர் நரேந்திர மோடி உறுதி தமிழக கலாசாரத்தை காக்க முழு முயற்சி மேற்கொள்வேன்

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்ந்து தீவிரமாகிக் கொண்டிருக்கும் நிலையில், ‘‘தமிழக மக்களின் கலாசார விருப்பங்களை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்’’ என பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார். ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தி, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இளைஞர்கள், இளம்பெண்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னின்றும் நடத்தும் இப்போராட்டத்தை தொடர்ந்து, ஜல்லிக்கட்டு தடையை நீக்குவதற்கான தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு மத்திய அரசு நேற்று முன்தினம் அனுமதி அளித்தது.ஆனாலும், மத்திய அரசே இந்த சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தி இளைஞர்கள் போராட்டம் தொடர்ந்து தீவிரமாகி வரும் நிலையில், பிரதமர் மோடி தமிழக மக்களுக்கு ஆதரவாக தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பதிவில், ‘‘தமிழகத்தின் மதிப்புமிக்க கலாசாரத்தை எண்ணி நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். எனவே தமிழக மக்களின் கலாசார விருப்பங்களை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. புதிய உச்சங்களை தமிழகம் பெற மாநில அரசுடன் மத்திய அரசு இணைந்து பாடுபடும் என உறுதி அளிக்கிறேன்’’ எனக் கூறி உள்ளார்.

மூலக்கதை