புதுச்சேரி சிறையில் கைதிகள் உண்ணாவிரதம் மாணவர்கள் போராட்டத்திற்கு பெருகும் ஆதரவு

தினமலர்  தினமலர்
புதுச்சேரி சிறையில் கைதிகள் உண்ணாவிரதம் மாணவர்கள் போராட்டத்திற்கு பெருகும் ஆதரவு


புதுச்சேரி: புதுச்சேரியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, ஐந்தாவது நாளாக போராட்டத்தை தொடரும் மாணவர்கள் ரத்ததானம் செய்து மனித நேயத்தை வெளிப்படுத்தினர். மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, சிறையில் கைதிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி, புதுச்சேரி ஏ.எப்.டி., மைதானத்தில் 17ம் தேதி முதல், கல்லுாரி மாணவ, மாணவியர், இளைஞர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நான்காம் நாளான நேற்று முன்தினம் இரவு, திடீரென மழை பெய்தது. திகைத்த நின்ற மாணவர்களுக்கு, சில தனியார் பஸ் உரிமையாளர்கள், பஸ்களை வழங்கினர். மாணவர்கள் பஸ்சில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர்.
திடல் சீரமைப்புமாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் ஏ.எப்.டி., திடலில், மழைநீர் தேங்கி நின்றது. தனியார் கட்டுமான நிறுவனத்தினர் சார்பில், திடலில் செம்மண், கிராவல் கொட்டி சீரமைக்கப்பட்டது. இதனால், வழக்கமான இடத்தை தவிர்த்து, மைதானத்தின் ஓரமாக மண் கொட்டி, சீரமைக்கப்பட்ட இடத்தில், புதிதாக ஷாமினாக்கள் அமைத்து போராட்டத்தை தொடர்ந்தனர். 5வது நாளான நேற்று நடந்த போராட்டத்தில் அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளை சேர்ந்த 5000க்கும் மேற்பட்ட மாணவர்கள் குவிந்தனர்.மாணவர்களுக்கு ஆதரவாக ஆசிரியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், பல்வேறு அமைப்பினர், இளைஞர்கள் ஊர்வலமாக வந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
நடைபயணம்பொம்மையார்பாளையத்தில் உள்ள சித்த சிவஞானி கலை அறிவியல் கல்லுாரி மாணவ, மாணவிகள், தமிழ் இசைக்கருவிகள் இசைத்தும், பாரம்பரிய சிலம்பாட்டம், சுருள் சாகசம் செய்து பேரணியாக புதுச்சேரி தலைமை தபால் நிலையம் வந்தனர். அங்கு, அயல்நாட்டு குளிர்பானங்கள் மூலம், கால்களை கழுவி எதிர்ப்பை தெரிவித்தனர். பின்னர் பேரணியாக சென்று ஏ.எப்.டி., திடல் போராட்டத்தில் பங்கேற்றனர்.
மாடுகளுடன் மறியல்ஏ.ஐ.டி.யூ.சி. மாட்டு வண்டி தொழிலாளர்கள் சார்பில், நேற்று காலை 10:00 மணியளவில் நுாற்றுக்கும் மேற்பட்ட மாடுகளுடன், தட்டாஞ்சாவடி லாஸ்பேட்டை சாலையில் கொக்குபார்க் சிக்னலில் ஜல்லிக்கட்டு தடையை நீக்க வலியுறுத்தி, சங்கத்தலைவர் சேது செல்வம் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது.
ரத்ததானம்உயிர்த்துளி ரத்ததான அமைப்பு சார்பில், ஏ.எப்.டி., திடல் எதிரில் மொபைல் ரத்ததானம் வாகனம் வரவழைக்கப்பட்டது. இதில், நுாற்றுக்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவர்கள், இளைஞர்கள் ரத்த தானம் வழங்கி, மனிதநேயத்தை வெளிப்படுத்தினர்.
உண்ணாவிரதம்சிங்காரவேலர் சிலை அருகே மா.கம்யூ., கட்சியினர் நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி நடத்தி வருகின்றனர்.கோவிந்தசாலை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இணைந்து, அண்ணா சாலையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பங்கேற்றோர், ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.
கைதிகள் உண்ணாவிரதம்காலாப்பட்டு மத்திய சிறையில் உள்ள விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் ௨௦௦ பேர், மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, நேற்று முன்தினம் உணவை வாங்க மறுத்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கே.எப்.சி. முற்றுகைவீராம்பட்டினம் மீனவ கிராமத்தை சேர்ந்த சிலர், நேற்று காலை காந்தி வீதியில் உள்ள கே.எப்.சி., நிறுவனத்திற்கு வந்தனர். அங்கு, வெளிநாட்டு பானங்களுக்கு எதிராக கோஷமிட்டவர்கள், நிறுவனத்திற்குள் சென்று, கோக் உள்ளிட்ட குளிர்பானங்களை, தரையில் கொட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த பெரியக்கடை போலீசார், போராட்டக்காரர்களை, கே.எப்.சி.யில் இருந்து வெளியே அனுப்பி வைத்தனர்.
போக்குவரத்து ஒழுங்குபடுத்தல்

போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள், போலீசாருக்கு உதவியாக கடலுார் சாலையில் வரிசையாக நின்று வாகனங்களை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோல், போராட்டக் களத்தில் குவியும் குப்பைகளையும், அவர்களே அகற்றிக் கொள்கின்றனர்.

மூலக்கதை