ஜல்லிக்கட்டை ஆதரித்து மழையிலும் போராட்டம்: பாரம்பரிய விளையாட்டுகளால் களை கட்டியது

தினமலர்  தினமலர்
ஜல்லிக்கட்டை ஆதரித்து மழையிலும் போராட்டம்: பாரம்பரிய விளையாட்டுகளால் களை கட்டியது

கடலுார்: ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி மாவட்டத்தில் நான்காம் நாளாக நேற்று கொட்டும் மழையிலும் போராட்டம் நீடித்தது. கடலுாரில் இளைஞர்கள் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடியதால் போராட்டம் 'களை' கட்டியது.
கடலுாரில் கடந்த 18ம் தேதி துவங்கிய மாணவர் மற்றும் இளைஞர்களின் போராட்டம் நேற்று முன்தினம் இரவு கனமழையிலும் தொடர்ந்தனர். போராட்ட திடலில் மழை நீர் தேங்கியதால் அருகில் உள்ள போஸ்ட் ஆபிஸ் பஸ் நிறுத்தத்தில் மாற்றினர். நான்காம் நாளான நேற்றைய போராட்டத்தில் பங்கேற்றவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பல்வேறு பதாகைகள், கறுப்பு மாடு உருவம் கொண்ட முகமூடி, மாடுபிடி பொம்மைகள் கையில் ஏந்தி கோஷமிட்டனர்.
இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மேளம் கொட்ட ஆடிப்பாடி தமிழர்களின் வீரக் கதையை பறைசாற்றினர். போராட்ட களத்தில் பாராம்பரிய விளையாட்டுக்களை விளையாடி தமிழர்களின் வரலாறுகளை நினைவுபடுத்தினர். பெண்கள் கும்மியடித்தும், சுங்கரங்காய் விளையாடினர். ஆண்கள் சிலம்பம், கொம்புகளை வைத்து விளையாடினர். தமிழர்களின் வீர விளையாட்டுகள் எங்களுக்கும் தெரியும் என்பதை உணர்த்தும் வகையில், இளம் பெண்கள் சிலம்பம் விளையாடி நிருபித்தனர். மேலும், இளைஞர்கள், இளம் பெண்கள் குத்தாட்டம், கழிவிளையாட்டு போன்ற பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாடியதால் போராட்டம் 'களை' கட்டியது.
சிதம்பரம்: அண்ணாமலை பல்கலைக் கழக மாணவர்கள் நேற்று கொட்டும் மழையிலும் போராட்டத்தை தொடர்ந்தனர். அப்போது மாதிரி வாடிவாசல் அமைத்து ஜல்லிக் கட்டு வீர விளையாட்டு நடத்தினர். போராட்டத்தில் சி.கொத்தங்குடி கிராம மக்கள் குடும்பத்துடன் ஊர்வலமாக வந்து பங்கேற்றனர். அவர்களை தொடர்ந்து அண்ணாமலை நகர் மக்களும் திரளாக பங்கேற்றனர்.
விருத்தாசலம்: நான்காம் நாளாக கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரி, பாலக்கரை பகுதிகளில் நடந்த போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள், பொது மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். பஸ் நிலையம் முன், மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. புகைப்பட மற்றும் வீடியோகிராபர்கள் பஸ் நிலைய வளாகத்தில் வெளிநாட்டு குளிர்பானங்களை தரையில் கொட்டி, எதிர்ப்பை வெளிப்படுத்தினர். எல்.ஐ.சி., முகவர் சங்கத்தினர் ஊர்வலமாக வந்து கோஷமிட்டனர். தன்னெழுச்சி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அரசு மருத்துவமனை ஊழியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
குறிஞ்சிப்பாடி: மாற்றுத்திறனாளிகள், தொண்டு நிறுவனத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் பஸ் நிலையம் அருகில் போராட்டத்தில் ஈடுட்டனர்.
பண்ருட்டி: பி.டி.ஓ., அலுவலகம் முன்பாக முக நுால் மற்றும் வாட்ஸ் அப் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் போராட்டம் நான்காம் நாளாக நேற்றும் தொடர்ந்தது. இதே போல் பனிக்கன்குப்பம், புதுப்பேட்டை , அங்குசெட்டிப்பாளையம், சேமக்கோட்டை பகுதிகளிலும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கம்மாபுரம்: கோட்டேரியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். அதேபோல், அரசக்குழி மற்றும் கம்மாபுரம் பஸ் நிறுத்தங்களில் நடந்த போராட்டங்களில் இளைஞர்கள், மாணவர்கள், கிராம மக்கள் திரளாக பங்கேற்றனர்.குமராட்சி: மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் ஜல்லிக்கட்டை ஆதரித்து கடை வீதியில் போராட்டம் நடத்தினர். முன்னதாக காளைகளை அலங்கரித்து ஊர்வலமாக சென்று போராட்டத்திற்கு பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தனர்.
பரங்கிப்பேட்டை: புவனகிரி, கீரப்பாளையம், பு.முட்லுார் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், இளைஞர்கள் சாலையோரம் அமர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் ஜல்லிக்கட்டுக்கான தடையை நிரந்தரமாக நீக்க வலியுறுத்தியும், பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தினர்.
சேத்தியாத்தோப்பு: மோட்டார் வாகன பழுபார்ப்போர் நலச்சங்கம் மற்றும் மக்கள் சட்ட பாதுகாப்பு உரிமைக் கழகத்தினர், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும், பீட்டாவை தடை செய்ய வேண்டும். வெளிநாட்டு குளிர் பானங்களை தடை செய்ய வலியுறுத்தி நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திட்டக்குடி: திட்டக்குடி பஸ் நிலையம், கூடலூர், கொடிக்களம், ஆ.பாளையம் பகுதிகளில் ராமநத்தம் பஸ் நிறுத்தங்களில் இளைஞர்களின் போராட்டம் நடந்தது. ராமநத்தம் உதவி தொடக்கக்கல்வி அலுவலகம் முன்பு மங்களூர் வட்டார தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மூலக்கதை