மாணவ சமுதாயத்துக்கு மகத்தான வெற்றி... ஒரு விதி செய்தோம்! போராட்டம் தொடரும் என அறிவிப்பு

தினமலர்  தினமலர்
மாணவ சமுதாயத்துக்கு மகத்தான வெற்றி... ஒரு விதி செய்தோம்! போராட்டம் தொடரும் என அறிவிப்பு

திருப்பூர் : ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து, திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளில், 4வது நாளாக நேற்றும் போராட்டம் நீடித்தது.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நிரந்தரமாக நீக்க வேண்டும்; "பீட்டா' அமைப்பை தடை செய்ய வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் எழுச்சியோடு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும், நேற்று போராட்டம், 4வது நாளாக தொடர்ந்தது.நேற்று, மாலை, "ஜல்லிக்கட்டு' நடத்த அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியானது. இருந்தாலும் கூட, "நிரந்தர சட்டம் வந்தால் மட்டுமே, போராட்டத்தை கைவிடுவோம்,' என்று மாணவர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டது. கோஷம் போடுவது, பறையடித்து ஆடுவதும், வெளிநாட்டு குளிர்பானங்களை கீழே ஊற்றுவது, என மாணவ, மாணவியர் போராட்டத்தை தொடர்ந்தனர்.* அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரே, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் உண்ணாவிரதம் நேற்றும் தொடர்ந்தது. உண்ணாவிரத பந்தலின் முன்பு, கும்மியாட்டம் ஆடி, போராட்டத்துக்கு ஆதரவை தெரிவித்தனர்.ஒப்பாரி பாடல்கள் பாடி, "பீட்டா' அமைப்புக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். அவிநாசி சுற்றுப்பகுதியில் பூண்டி, சேவூர், கருவலூர், தண்டுக்காரன்பாளையம், புது திருப்பூர் அப்பேரல் பார்க் உள்ளிட்ட பகுதிகளிலும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தன. பூண்டியில், காந்தி சிலை முன், அன்பு இல்ல மாணவர்கள் கோஷமெழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.* எஸ்.பெரியபாளையம் பஸ் ஸ்டாப்பில், பெண்கள், சிறுவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்ற தர்ணா போராட்டம் நடந்தது. கருப்புக்கொடி ஏற்றியும், ஜல்லிக்கட்டு வலியுறுத்திய வாசகம் அடங்கிய பதாகைகளுடனும், அவர்கள் பங்கேற்றனர். ஊத்துக்குளி பஸ் ஸ்டாண்ட், ஆர்.எஸ்., பகுதியிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.* தாராபுரம் பஸ் ஸ்டாண்ட், மூலனூர், குண்டடம், ஊதியூர் உள்ளிட்ட பகுதிகளில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடந்தது. தாராபுரத்தில், கல்லூரி மாணவர்கள் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில், மாடுகளை ஓட்டிக் கொண்டு சென்று, சுமை தொழிலாளர்கள் ஆதரவு தெரிவித்தனர்.* காங்கயத்தில் பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா, நத்தக்காடையூர், முத்தூர், வெள்ளக்கோவில் உட்பட பல பகுதிகளில், நேற்று, 4வது நாளாக <உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கல்லூரி மாணவர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
ரேக்ளா வண்டியில்...நேற்றைய போராட்டத்தின் போது, காங்கயம் காளை பூட்டிக் கொண்டு, ரேக்ளா வண்டியில் மாணவர்கள், போராட்டக்களத்துக்கு வந்தனர். ஜல்லிக்கட்டு, ரேக்ளா, மஞ்சு விரட்டு <உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுக்கு அனுமதிகோரி கோஷம் எழுப்பிவாறு வந்தனர். வாகன நெரிசல் மிகுந்த ரோட்டில், கம்பீரமாக வந்த காளையுடன் கூடிய ரேக்ளா வண்டியை பார்த்ததும், போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.தடுக்க முயற்சித்தபோது, காளைகள் திமிறின. அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டதையடுத்து, மாணவர்களை தட்டிக் கொடுத்து, ரேக்ளாவை ஓட்டிச் செல்லுமாறு போலீசார் தெரிவித்தனர். மங்கலம் ரோடு வழியாக, ரேக்ளா வண்டி சென்றது. பல இடங்களில், போலீசார் உள்ள நிலையில், மைய போராட்ட களத்துக்கு ரேக்ளா வண்டி வந்தது எப்படி என்று, உயர் அதிகாரிகள், போலீசாரை கடிந்து கொண்டனர்.
மழையிலும் கோஷம்திருப்பூரில் நேற்று மாலை, தூறல் மழை பெய்தது. பிளாஸ்டிக் தார்பாய்களை பிடித்து, மாணவர்கள் கூரைபோல் அமைத்து, போராட்டத்தை தொடர்ந்தனர். அவசர சட்டம் பிறக்கப்பட்டு, ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடு நடந்து வரும் செய்தி வெளியானபோதும், "நிரந்தர சட்டம்; பீட்டாவுக்கு தடை' என்ற கோரிக்கை நிறைவேறும் வரை, போராட்டம் தொடரும் என்று, மாணவர்கள் தெரிவித்தனர்.

மூலக்கதை