ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 4வது சுற்றுக்கு முன்னேறினார் நடால்

தினகரன்  தினகரன்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டித் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் விளையாட, நட்சத்திர வீரர் ரபேல் நடால் தகுதி பெற்றார். மூன்றாவது சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவுடன் நேற்று மோதிய நடால் 4-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். அடுத்த செட்டில் அதிரடியாக விளையாடி ஸ்வெரவின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்த அவர் 6-3 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்த 3வது செட்டில் ஸ்வெரவ் 7-6 (7-5) என்ற கணக்கில் வென்று 2-1 என முன்னிலை பெற்றார்.இதைத் தொடர்ந்து, 4வது மற்றும் 5வது செட்டில் தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்வெரவை திணறடித்த நடால் 4-6, 6-3, 6-7 (5-7), 6-3, 6-2 என 4 மணி, 6 நிமிடம் போராடி வென்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு 3வது சுற்றில் உஸ்பெகிஸ்தான் வீரர் டெனிஸ் இஸ்டோமின் 6-4, 4-6, 6-4, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் காரெனோ புஸ்டாவை வீழ்த்தினார். சென்னை ஓபன் சாம்பியன் பாடிஸ்டா அகுத் (ஸ்பெயின்) 7-5, 6-7 (6-8), 7-6 (7-3), 6-4 என்ற செட் கணக்கில் சக வீரர் டேவிட் பெர்ரரை வீழ்த்தி கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார். முன்னணி வீரர்கள் மிலோஸ் ரயோனிச் (கனடா), டேவிட் காபின் (பெல்ஜியம்), கேல் மான்பில்ஸ் (பிரான்ஸ்), டொமினிக் தியம் (ஆஸ்திரியா) ஆகியோரும் 4வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். செரீனா அசத்தல்: மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6-1, 6-3 என்ற நேர் செட்களில் சக வீராங்கனை நிகோல் கிப்சை எளிதாக வீழ்த்தினார். மற்றொரு 3வது சுற்றில் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 3-6, 1-6 என்ற நேர் செட்களில் ஜோகன்னா கோன்டாவிடம் (இங்கிலாந்து) தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார். ரஷ்யாவின் எகடரினா மகரோவா (30வது ரேங்க்) 6-2, 6-7 (3-7), 6-3 என்ற செட் கணக்கில் டொமினிகா சிபுல்கோவாவை (ஸ்லோவகியா, 6வது ரேங்க்) வீழ்த்தி 4வது சுற்றுக்கு தகுதி பெற்றார். பார்போரா ஸ்டிரைகோவா (செக்.), ஜெனிபர் பிராடி (அமெரிக்கா), லூசிக் பரோனி (குரோஷியா) ஆகியோரும் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா - இவான் டோடிக் (குரோஷியா) ஜோடி 7-5, 6-4 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் சீஜ்மண்ட் - மேட் பாவிக் (குரோஷியா) ஜோடியை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறியது. மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - கேப்ரியலா டப்ரோவ்ஸ்கி (கனடா) ஜோடி 6-4, 6-7 (5-7), 10-7 என்ற செட் கணக்கில் போராடி வென்றது.

மூலக்கதை