குஜராத் அபார பந்துவீச்சு இதர இந்தியா 206/9

தினகரன்  தினகரன்

மும்பை: ரஞ்சி சாம்பியன் குஜராத் அணியுடனான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில்,  இதர இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 206 ரன் எடுத்துள்ளது.  மும்பை, பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கிய இப்போட்டியில், டாசில் வென்ற குஜராத் அணி முதலில் பேட் செய்தது. அந்த அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 300 ரன் எடுத்திருந்தது. சிராக் காந்தி 136 ரன், ஹர்திக் பட்டேல் 9 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர்.சிராக் 169 ரன்  (202 பந்து, 22 பவுண்டரி, 2 சிக்சர்), ஈஷ்வர் சவுதாரி 15 ரன்னில் பெவிலியன் திரும்ப, குஜராத் முதல் இன்னிங்சில் 358 ரன் குவித்து ஆல் அவுட்டானது. ஹர்திக் பட்டேல் 18 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதர இந்தியா பந்துவீச்சில் சித்தார்த் கவுல் 5, பங்கஜ் சிங் 4, ஹெர்வாத்கர் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, இதர இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அபினவ் முகுந்த் 8 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.ஹெர்வாத்கர் - கேப்டன் செதேஷ்வர் புஜாரா ஜோடி 2வது விக்கெட்டுக்கு 68 ரன் சேர்த்தது. ஹெர்வாத்கர் 48, கருண் நாயர் 28, மனோஜ் திவாரி 12 ரன் எடுக்க, அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் அணிவகுத்தனர் (3 பேர் டக் அவுட்). ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உறுதியுடன் விளையாடிய புஜாரா 86 ரன் எடுத்து (156 பந்து, 11 பவுண்டரி) ஆட்டமிழந்தார். இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இதர இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 206 ரன் எடுத்துள்ளது. பங்கஜ் சிங் 7, முகமது சிராஜ் 8 ரன்னுடன் களத்தில் உள்ளனர். குஜராத் பந்துவீச்சில் சிந்தன் கஜா, ஹர்திக் பட்டேல் தலா 3, மோகித் தடானி 2, ஈஷ்வர் 1 விக்கெட் வீழ்த்தினர். கை வசம் 1 விக்கெட் இருக்க, இதர இந்தியா 152 ரன் பின்தங்கியுள்ள நிலையில் இன்று 3வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது. இதனால் குஜராத் அணியின் கை ஓங்கியுள்ளது.

மூலக்கதை