கொல்கத்தாவில் இன்று 3வது ஒருநாள் போட்டி ஒயிட்வாஷ் செய்யுமா இந்தியா?

தினகரன்  தினகரன்

கொல்கத்தா: இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30க்கு தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரில் 0-4 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்ததை அடுத்து, தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. முதல் 2 ஒருநாள் போட்டியிலும் அபாரமாக வென்ற இந்தியா 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றிவிட்டது. இந்த நிலையில், 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கொல்கத்தாவில் இன்று நடக்கிறது.  புனே மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் கேப்டன் கோஹ்லி (122) - கேதார் ஜாதவ் (120) ஜோடியும், கட்டாக்கில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் யுவராஜ் சிங் (150) - எம்.எஸ்.டோனி (134) ஜோடியும் சிறப்பாக விளையாடியது வெற்றியை வசப்படுத்த உதவியது.தொடர்ச்சியாக 3வது வெற்றியுடன் ஒயிட்வாஷ் செய்து தொடரைக் கைப்பற்ற இந்தியா வரிந்துகட்டுகிறது. பந்துவீச்சில் சற்று தடுமாறினாலும், வலுவான பேட்டிங் வரிசை அமைந்துள்ளதால் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி உற்சாகமாக உள்ளது. ரன் குவிப்புக்கு சாதகமான ஆடுகளங்கள் மற்றும் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவும் இந்திய அணிக்கு சாதகமாக அமைந்துள்ளது. காயம் அடைந்துள்ள தொடக்க வீரர் தவானுக்கு பதிலாக அஜிங்க்யா ரகானே இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு தொடக்க வீரர் கே.எல்.ராகுலும் ரன் குவிக்க முடியாமல் திணறி வருகிறார். எனினும், அவருக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. மற்றபடி அணியில் பெரிய மாற்றம் இருக்காது. அதே சமயம், இரண்டு போட்டியிலுமே மிகப் பெரிய ஸ்கோர் அடித்தும் வெற்றி வாய்ப்பை நழுவவிட்ட இங்கிலாந்து அணி வீரர்கள் ஏமாற்றத்தில் ஆழ்ந்துள்ளனர். கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றியை கைப்பற்றும் முனைப்புடன் அவர்கள் களமிறங்குவதால், ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி. கட்டாக் போட்டியின்போது டோனி அடித்த பந்தை பிடிக்க முயன்ற இங்கிலாந்து தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், அவர் நாடு திரும்பியுள்ளார். இதனால் ஜானி பேர்ஸ்டோ களமிறக்கப்படலாம். மேலும், ஹேல்சுக்கு பதிலாக டி20 அணிக்கான அணியிலும் அவர் இடம் பெறுவார் என இங்கிலாந்து அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஜூன் மாதம் இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற உள்ளதால், கொல்கத்தா போட்டியில் வெற்றியை வசப்படுத்த இரு அணிகளுமே உறுதியுடன் உள்ளன. இந்தியா: விராத் கோஹ்லி (கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், அஜிங்க்யா ரகானே, மணிஷ் பாண்டே, யுவராஜ் சிங், எம்.எஸ்.டோனி (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அமித் மிஷ்ரா, ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பூம்ரா, கேதார் ஜாதவ், புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ். இங்கிலாந்து: இயான் மார்கன் ( கேப்டன்), மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோ, ஜேக் பால், சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், லியம் டாவ்சன், லியம் பிளங்க்கெட், அடில் ரஷித், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ்.

மூலக்கதை