முதல் முறையாக ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு அனுமதி வழங்கிய துபாய் அரசு

தினகரன்  தினகரன்

துபாய்: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து துபாய் மற்றும் இலங்கை தலைநகர் கொழும்புவிலும் தமிழர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து கடந்த 5 நாட்களாக போராட்டம் நடத்தப்படுகிறது. ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கக் கோரி தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் பலதரப்பட்டோரும் போராட்டக் களத்தில் இறங்கினார்கள்.தமிழகத்தில் மட்டுமின்றி உலகம் முழுவதும் வாழும் தமிழர்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுக்க தொடங்கினார்கள். இதனால் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கக் கோரி வெளிநாடுகளிலும் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன. இந்நிலையில் துபாயிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. துபாயில் எந்த போராட்டம் நடத்தவும் அந்நாட்டு அரசு அனுமதி தருவதில்லை. ஆனால் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போராட்டதுக்கு ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது. துபாயில் உள்ள ஜமீல் பார்க்கில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் பீட்டா அமைப்பை எதிர்த்தும், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கக் கோரியும் முழக்கங்களை எழுப்பினார்கள். இதேபோல் இலங்கை தலைநகர் கொழும்புவிலும் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரமாக அனுமதி வழங்கக் கோரி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், என ஏராளமானோர் இதில் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டுக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

மூலக்கதை