அமெரிக்க அதிபராக பதவி ஏற்றதும் ஒபாமாகேர் இன்சூரன்ஸ் ரத்து டிரம்ப் முதல் கையெழுத்து

தினகரன்  தினகரன்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக பதவி ஏற்றதும் முதல் கையெழுத்தாக ஒபாமா கொண்டு வந்த மருத்துவ காப்பீடு திட்டமான ஒபாமாகேரை ரத்து செய்து டிரம்ப் முதல் கையெழுத்திட்டார். அமெரிக்காவின் 45வது அதிபராக குடியரசுக் கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் நேற்று முன்தினம் பதவி ஏற்றார். கேபிடல் ஹில்லில் பதவி ஏற்ற பின்னர் உடனடியாக வெள்ளை மாளிகையை நோக்கி ஊர்வலமாக சென்றார். அப்போது சாலையின் இருபுறமும் திரண்டு நின்ற மக்கள் டிரம்ப்பிற்கு வரவேற்பு அளித்தனர். டிரம்ப்புடன், அதிபருக்கான காரில் அவரது மனைவி மெலானியா, இவர்களது 10 வயது மகன் பாரோன் ஆகியோர் சென்றனர். அவர்களை தொடர்ந்து டிரம்ப் மகள் இவாங்கா, அவரது கணவரும், வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகருமான ஜார்டு குஷ்னர், டிரம்ப் மகன்கள் டான், எரிக் மற்றும் இருவரது மனைவிகள் மற்றும் துணை அதிபர் மைக் பென்ஸ், அவரது மனைவி ஆகியோர் சென்றனர். வெள்ளை மாளிகை சென்றதும் பாரம்பரிய வாத்தியங்கள் முழங்க ராணுவ அணிவகுப்பு மரியாதை நடந்தது. அமெரிக்காவின் தலைமை படைத்தளபதி என்ற முறையில் டிரம்ப் இதை ஏற்றுக்கொண்டார். அதை தொடர்ந்து வெள்ளை மாளிகையில் நுழைந்த அவர் ஓவல் அலுவலகத்தில் அதிபர் இருக்கையில் அமர்ந்து தனது பணிகளை முறைப்படி தொடங்கினார். அப்போது பதவி விலகிய முன்னாள் அதிபர் ஒபாமா கொண்டு வந்த ‘ஒபாமா கேர்’ மருத்துவ இன்சூரன்ஸ் திட்டத்தை முடக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட உத்தரவில் முதல் கையெழுத்து போட்டார். அந்த உத்தரவில் ‘ஒபாமா கேர்’ திட்டத்தின் சட்ட விதிமுறைகள் முடக்கப்பட்டு அவை அரசு நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டது. இதை விட மிக சிறப்பான இன்சூரன்ஸ் திட்டம் கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காதான் எல்லாம் அதிபர் டிரம்ப் முதல் உரைஅமெரிக்க அதிபராக பதவி ஏற்ற பின் டிரம்ப் தனது முதல் உரையில் கூறியதாவது, “அமெரிக்க குடிமக்கள் ஒவ்வொருவரின் நலனுக்காகவும் நான் ஓய்வின்றி பணியாற்றுவேன்.  இந்த நாளில் இருந்து நமது மண்ணில் புதிய பார்வையுடன் ஆட்சி நடைபெறும். வர்த்தகம், வரி விதிப்பு, குடியுரிமை, வெளிநாட்டு விவகாரம் போன்ற அனைத்தும் அமெரிக்க தொழிலாளர்கள் மற்றும் அமெரிக்க குடும்பங்களின் நலன்களுக்கானதாகவே அமையும். உங்களுக்காக என் உயிர்மூச்சு உள்ளவரை போராடுவேன். இந்த முறை வெற்றுப் பேச்சு முடிவுக்கு வந்துள்ளது. தற்போது நடவடிக்கைக்கான காலம் உருவாகி விட்டது” என்று உணர்ச்சி பொங்க பேசினார்.இந்தியாவுடன் உறவு பலப்படுத்தப்படும்டிரம்ப் நிர்வாகத்தில் புதிய பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்ற ஜேம்ஸ் மேத்திஸ் கூறியதாவது: பாதுகாப்பு துறையில் எடுக்கப்படும் ஒவ்வொரு நடவடிக்கையும், அமெரிக்க ராணுவத்தை போருக்கு தயார்நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தும் விதத்திலும், எதிர்க்காலத்தை எதிர்கொள்ளும் வகையிலும் இருக்கும். நமது நட்பு நாடுகளுடன் பொருளாதார முறையிலும், ராணுவ வகையிலும் உறவு பலப்படுத்தப்படும். அந்த வகையில் இந்தியா நமது நட்புநாடு. மிகப்பெரிய ராணுவ கூட்டாளி. இருநாடுகளுடனான பாதுகாப்பு உறவு சமீபகாலத்தில் வலுப்பெற்றுள்ளது. அது தொடர்ந்து மேம்படுத்தப்படும்.பாகிஸ்தான் சமீபத்தில் சில பாடங்களை கற்றுள்ளது. எனவே இந்தியாவுடன் இணைந்து செயல்படும் என நினைக்கிறேன். பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாதிகளை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கியமாக தலிபான் மற்றும் ஹக்கானி குழுவினரை வெளியேற்ற வேண்டும் என்றார்.

மூலக்கதை