முதல்வருக்கு முட்டுக்கட்டை போடும் சசி குடும்பம்! அரசு விழா ரத்து; அதிகாரிகள் அதிர்ச்சி

தினமலர்  தினமலர்
முதல்வருக்கு முட்டுக்கட்டை போடும் சசி குடும்பம்! அரசு விழா ரத்து; அதிகாரிகள் அதிர்ச்சி

சசிகலா குடும்பத்தினர் உத்தரவு காரணமாக, முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் நடக்கவிருந்த, அரசு விழா திடீரென ரத்து செய்யப்பட்டது. இது, அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜெ., மறைவுக்கு பிறகு, தமிழக முதல்வராக, பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். ஏற்கனவே, இரு முறை முதல்வராக பணியாற்றியவர் என்பதால், அவர் முதல்வரானதை அனைவரும் ஏற்றுக்
கொண்டனர்.அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., பொதுச்செயலராக சசிகலா நியமனம் செய்யப்பட்டார். இதை, கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது ஆதரவாளர்கள் ஒட்டும் போஸ்டர்களை கிழித்து வருகின்றனர்.

எதிர்ப்பு கிளம்பியது

இச்சூழ்நிலையில், முதல்வர் பதவியையும், சசிகலா ஏற்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதற்கான பணிகளை, அவரது குடும்பத்தினர் துவக்கினர்; இதற்கு, எதிர்ப்பு கிளம்பியது.
எனவே, முதல்வராகும் ஆசையை, தற்காலிகமாக சசிகலா ஒத்திவைத்துள்ளார். எனினும், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, முதல்வர் பதவியில், பன்னீர்செல்வம் இருப்பது பிடிக்கவில்லை. எனவே, அவருக்கு பல விதத்தில் குடைச்சல் கொடுத்து வருகின்றனர்.
அ.தி.மு.க., பொதுச்செயலராக சசிகலா தேர்வானதும், மாவட்ட நிர்வாகிகளை, கட்சி அலுவலகத்தில் சந்தித்தார். அப்போது, அவரது வருகைக்காக, அமைச்சர்களுடன் பன்னீர்செல்வமும் காத்திருந்தார்.

கட்சி அலுவலகத்தின் முதல் தளத்தில், சசிகலா நிர்வாகிகளுடன் பேசிய போது, முதல்வர் அழைக்கப்படவில்லை. அனைவரும் கீழே கால் வலிக்க காத்திருந்தனர். முதல்வரை பார்த்த போது, மரியாதைக்கு வணக்கம் கூட செலுத்தவில்லை. இது, பன்னீர்செல்வத்திற்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஜன., 12ல், முதல்வர் பன்னீர்செல்வம், 25 துறைகளின் சார்பில், வட மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மற்றும் புதிய தொழிற்சாலைகளை, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் திறந்து வைக்க முடிவு செய்தார். அந்த நிகழ்ச்சியை, சென்னை, தலைமை செயலகத்தில் நடத்த வேண்டாம் என, சசிகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மக்கள் ஆதரவு

அதைத் தொடர்ந்து, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் நடத்த, ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், நள்ளிரவு திடீரென விழா ரத்து செய்யப்பட்டது. இதற்கு, சசிகலா குடும்ப உறுப்பினர்கள் சிலரே காரணம் என, தகவல் வெளியாகி உள்ளது.

பன்னீர்செல்வத்திற்கு, நாளுக்கு நாள் மக்களிடம் ஆதரவு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அரசு கட்டடங்களை திறந்து வைத்து, அவர் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கக் கூடாது என்றே, அந்த விழாவை ரத்து செய்ய வைத்துள்ளனர். புதிய கட்டடங்களை, அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் திறந்து வைக்கட்டும் என்றும் கூறி உள்ளனர்.

இதன் காரணமாக, அரசு விழா ரத்து செய்யப்பட்டுள்ள போதிலும், அந்த கட்டடங்கள் எப்போது திறக்கப்படும் என, அறிவிக்கப்படவில்லை. சசிகலா குடும்பத்தினர், முதல்வரை சுதந்திரமாக செயல்பட விடாமல் தடுப்பது, அதிகாரிகள் மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகளிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மூலக்கதை