கூட்டமைப்பு இல்லாத ஊருக்கு வழிகாட்டி வருகிறது: ஆனந்தசங்கரி

TAMIL 24 NEWS  TAMIL 24 NEWS
கூட்டமைப்பு இல்லாத ஊருக்கு வழிகாட்டி வருகிறது: ஆனந்தசங்கரி

சமஷ்டி மற்றும் வடக்கு- கிழக்கு இணைப்பு ஆகிய இரு விடயங்களும் சாத்தியப்படாதவையாகும். அடைய முடியாத ஒன்றை கூறி எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனினாலும் கூட்டமைப்பினாலும் மக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர் என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

தமிழர் விடுதலை கூட்டணியின் அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ‘சமஷ்டி மற்றும் வடக்கு- கிழக்கு இணைப்பு ஆகிய விடயங்கள்n தொடர்பில் அரசாங்கத்தின் கருத்தும் கூடட்டமைப்பின் கருத்தும் முற்றாக வேறுபட்டதாகவே காணப்படுகிறது.

சமஷ்டிக்கு வாய்ப்பில்லை அதை பற்றி பேசாதீர்கள் என ஜனாதிபதி கூறுகிறார். ஆனால், மாறாக எதிர்க்கட்சி தலைவரும், கூட்டமைப்பின் தலைவருமான சந்பந்தர் சமஷ்டியை கொண்டுவருவோம் என சூளுரை விடுத்து வருகிறார்.

அதுமட்டுமின்றி வடக்கு- கிழக்கு இணைப்பற்ற ஒரு தீர்வை நாம் ஏற்கமாட்டோம் என சம்பந்தர் அண்மையில் குறிப்பிட்டுள்ளார். அது அவ்வளவு சுலபமான காரியமல்ல.

வடக்கு- கிழக்கு இணைப்பு தொடர்பில் கூட்டமைப்பினர் மாத்திரமே கூறி வருகின்ற நிலையில், இது தொடர்பில் மதிப்புமிக்க முஸ்லிம் பெருந்தகை ஒருவர் இது குறித்து இதுவரை எவ்வித கருத்தையும் முன்வைத்ததாக இல்லை.

கிழக்கு மாகாண சபையில் பெரும்பாலான அங்கத்தவர்கள் முஸ்லிம்களாக விளங்குகின்ற நிலையில். வடக்கு- கிழக்கு இணைப்பிற்கு முஸ்லிம் மக்களின் பங்கு முக்கியமானதாகும். எனவே இந்த இணைப்பை ஏற்படுத்த வேண்டுமாயின் பதவிகளுக்கு ஆசைபடாது பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்.

கூட்டமைப்பு அடைய முடியாத ஒன்றை சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறது. இது இல்லாத ஊருக்கு வழிகாட்டுவது போன்ற விடயமாகும். நான் சமஷ்டி மற்றும் வடக்கு- கிழக்கு இணைப்பிற்கு எதிரானவன் அல்ல. ஆனால், இது சாத்தியப்படாது என்ற கூறுகிறேன்’ என்றார்.

மூலக்கதை