விவாகரத்து வழக்கில் ஆஜராகாத நடிகை ரம்பாவுக்கு நீதிமன்றம் கண்டனம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
விவாகரத்து வழக்கில் ஆஜராகாத நடிகை ரம்பாவுக்கு நீதிமன்றம் கண்டனம்

சென்னை: விவாகரத்து வழக்கில் ஆஜராகாத நடிகை ரம்பாவுக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பிரபல நடிகை ரம்பாவுக்கும் இலங்கை தமிழரான இந்திரகுமார் என்பவருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இருவரும் கனடாவில் வாழ்ந்தனர்.

இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில், கணவருடன் பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், ரம்பா சென்னைக்கு வந்து விட்டார்.

இதையடுத்து சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் நடிகை ரம்பா ஒரு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், 'தன் கணவரை தன்னுடன் சேர்ந்து வாழ உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தார்.

தற்போது சினிமாவில் நடிக்காததால் தனக்கு வருமானம் எதுவும் இல்லை. அதனால், மாதந்தோறும் தனக்கு ரூ.1.50 லட்சமும், தன் இரு மகள்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம், 1 லட்சம் என மொத்தம் ரூ 2.50 லட்சம் ஜீவனாம்சம் வழங்க கணவர் இந்திரகுமாருக்கு உத்தரவிட வேண்டும்' என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு கடந்த டிசம்பர் 3-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது, ரம்பா மற்றொரு மனுவை தாக்கல் செய்தார். அதில், என்னுடைய கணவர் என்னுடன் சேர்ந்து வாழவில்லை. குழந்தைகள் இருவரும் என்னுடைய கட்டுப் பாட்டின் கீழ்தான் உள்ளனர். அவர்கள் சென்னையில் உள்ள பள்ளிக்கூடத்தில் படிக்கின்றனர். எனவே, இந்த இரு குழந்தைகளின் சட்டப்படியான பாதுகாவலராக என்னை (ரம்பாவை) அறி விக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி பூங்குழலி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ரம்பாவும், அவரது கணவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர்கள் தரப்பு வக்கீல்கள் ஆஜராகி விசாரணையைத் தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதற்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். 'கணவனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று கேட்டு வழக்கு தொடர்ந்து விட்டு ரம்பா விசாரணைக்கு வராமல் இருந்தால் என்ன அர்த்தம்? கடந்த டிசம்பர் மாதம் நடந்த விசாரணைக்கும் அவர் வரவில்லை. இப்போதும் அவர் வரவில்லை' என்று நீதிபதி கோபத்துடன் கேட்டார்.

பின்னர் வழக்கு விசாரணையை பிப்ரவரி 4-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

மூலக்கதை