தமிழர்களின் உணர்வுக்காக சட்டத்தை மாற்று - லாரன்ஸ் உணர்ச்சிகர பேச்சு

தினமலர்  தினமலர்
தமிழர்களின் உணர்வுக்காக சட்டத்தை மாற்று  லாரன்ஸ் உணர்ச்சிகர பேச்சு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் துவக்கி வைத்த அமைதி போராட்டம் இன்று ஒட்டுமொத்த தமிழர்களின் எழுச்சி போராட்டமாக மாறியிருக்கிறது. தொடர்ந்து 5வது நாளாக, வெயில், குளிரையும் பொருட்படுத்தாமல் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே உதவி வருகிறார் நடிகர் ராகவா லாரன்ஸ். குறிப்பாக களத்தில் இறங்கி போராடி வருவதோடு, அவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார். தனக்கு உடல்நலம் சரியில்லாமல் போன நிலையில் அதையும் பொருட்டப்படுத்தாமல் தொடர்ந்து களத்தில் போராடி வருகிறார். இந்நிலையில் நேற்று உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த லாரன்ஸ், இன்று போராட்டத்தில் பங்கேற்றார். பின்னர் போராட்டக்களத்தில் மிகவும் உணர்ச்சிகரமாக பேசினார் லாரன்ஸ். அவர் பேசுகையில்....

10 பேரால் ஆரம்பித்த இந்த போராட்டம் இன்று லட்சக்கணக்கான பேர் இணைந்து போராடும் போராட்டமாக மாறியிருக்கிறது. இங்கு இருப்பவர்கள் சார்பாகத்தான் நான் பேசுகிறேன். தமிழ் மேல் கை வைத்தால் என்ன நடக்கும் என்பதை நீங்கள் இப்போது பார்த்திருப்பீர்கள். ஐயா மோடி அவர்களே... நீங்கள் ஒரே நாளில் ரூபாய் நோட்டை வாபஸ் பெற்றீர்கள். உங்களுக்கு மதிப்பு கொடுத்து நாங்கள் சிரமத்தை பொருட்படுத்தாது ஏடிஎம்., மற்றும் வங்கியில் காத்து கிடந்தோம். அதேப்போல் எங்களுக்காக இதை நீங்கள் செய்து தான் ஆக வேண்டும். ஜல்லிக்கட்டை நடத்தாவிட்டால் எங்களுக்கு பாதிப்பு கிடையாது, உங்களுக்கு தான் பாதிப்பு அதிகம்.

பன்னீர் செல்வம் ஐயா நீங்க ரொம்ப அடக்க ஒடுக்கமா இருக்கீங்க, இந்த அடக்க ஓடுக்கம் கூட எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ஜல்லிக்கட்டுக்காக நானும் தான் டில்லிக்கு போகிறேன் என்று நீங்கள்(பன்னீர் செல்வம்) கேட்கலாம். மற்றவர்கள் சொல்வதை நீங்கள் கேட்கிறீர்கள். ஆகையால் நாங்கள் மற்றவர்களை கேட்க முடியாது, உங்களிடம் தான் கேட்க முடியும். எங்களுக்கு ஜல்லிக்கட்டு வேண்டும். சும்மா இப்போது ஜல்லிக்கட்டு நடத்தி விட்டு இன்னும் ஒரு ஆறு மாதத்தில் தடை போட்டுவிடக்கூடாது, அதனால் எங்களுக்கு நிரந்த தீர்வு வேண்டும், அதுவரை இந்தப்போராட்டம் ஓயாது.

என் வம்சமே விளையாடாணும், நாளைய சந்ததிகள் வந்து விளையாடினால் கூட அப்போது கூட எந்த பிரச்னையும் வராத அளவிற்கு ஜல்லிக்கட்டு மீதான எந்த தடையும் இல்லாத அளவுக்கு சட்டம் கொண்டு வர வேண்டும். எது எதுக்கோ சட்டத்தை மாற்றுகிறீர்கள், தமிழர்களின் உணர்வுக்காக சட்டத்தை மாற்றுங்கள். மரியாதையாக சொல்கிறோம்... அன்பாக கேட்குறோம்... நாங்கள் சொல்வதை நீங்கள் கேட்டே தான் ஆகணும். எங்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும்.

நாகரீகம் தெரியாமல் அரசியல்வாதிகள் போராடலாம், நாம் அந்த மாதிரி செய்யக்கூடாது. இன்றைக்கு அரசியல்வாதிகளின் தூக்கம் போச்சு... அய்யய்யோ தேர்தல் வருமே... ஜெய்ப்போமா... ஓட்டு போடுவார்களா... என்று தூக்கமின்றி புலம்புகிறார்கள். இந்தப்போராட்டம் வெறும் ஜல்லிக்கட்டோடு நின்றுவிடாது. நாளை விவசாயம், ஊழல்... என்று தொடரும்.

இவ்வாறு லாரன்ஸ் பேசினார்.

மூலக்கதை