தமிழர்கள் உருவாக்கிய தீப்பொறி நாடு முழுவதும் பரவ வேண்டும்: மார்கண்டேய கட்ஜூ வீர முழக்கம்

PARIS TAMIL  PARIS TAMIL
தமிழர்கள் உருவாக்கிய தீப்பொறி நாடு முழுவதும் பரவ வேண்டும்: மார்கண்டேய கட்ஜூ வீர முழக்கம்

தமிழக இளைஞர்களின் இந்த போராட்டம் அடைந்துள்ள வரலாற்று முக்கியத்துவத்தை, இந்தியர்களோ, தமிழர்களோ கூட முழுமையாக உணர்ந்திருப்பார்களா என தெரியவில்லை என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்.

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு ஆதரவாக தமிழக இளைஞர்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து மார்கண்டேய கட்ஜூ மிகப்பெரிய பதிவை பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.

இது குறித்து அவர் தனது பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது, தமிழக மக்களின் இந்த மகத்தான போராட்டம் அடைந்துள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி குறித்து, இந்தியர்களோ, ஏன் அனைத்துத் தமிழர்களுமோ கூட முழுமையாக உணர்ந்திருப்பார்களா என்று தெரியவில்லை. ஆனால், இந்த போராட்டம் ஜல்லிக்கட்டோடு முடிந்து விடும் என்றோ, தமிழகத்தோடு நின்று விடும் என்றோ நினைக்கக் கூடாது.

இந்தியாவின் மிகப்பெரிய சவாலாக விளங்கும் வறுமை, வேலையில்லா திண்டாட்டம், போதிய சுகாதார வசதியின்மை, சத்துணவு குறைபாடு போன்றவற்றுக்கு எதிராகவும் இந்த போராட்டம் தொடர்ந்து, அனைத்து சவால்களையும் வெற்றி காண வேண்டும்.

தமிழர்கள் ஏற்றிய இந்த தீப்பொறி, நாடு முழுவதும் பரவி, நமது மிகப்பெரிய பிரச்னைகளை முறியடிக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தினை நாம் முன் உதாரணமாக வைத்துக் கொண்டு அதனை பின்பற்ற வேண்டும். எல்லோரும் ஒருங்கிணைய வேண்டும். ஜாதி, மத, இனம் என்ற எந்த அடிப்படையிலும் பிரிவினை ஏற்பட்டுவிடக் கூடாது. இதனை செய்துவிட்டால், இந்தியாவில் உள்ள அனைத்துப் பிரச்னைகளும் தீர்ந்துவிடும்.

மேலும், இந்த போராட்டத்தில், அரசியல்வாதிகள் தலையிட அனுமதி மறுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. தமிழகம் மட்டும் அல்லாமல் இந்தியாவுக்கே தலைமைதாங்கும் பண்பு தமிழர்களுக்கு இருக்கிறது என்பதை நிரூபித்துக்காட்டிவிட்டார்கள். இதே பாதையில் பல சவால்களை எதிர்கொள்ளலாம்.

தமிழர்கள் நீண்ட நாள் வாழ வாழ்த்துகிறேன். தமிழ் மக்கள் வாழ்க என்று பதிவு செய்துள்ளார்.

 

மூலக்கதை