ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம் அரசியல் சட்டப்படி செல்லாது: சோலி சொராப்ஜி கருத்து

PARIS TAMIL  PARIS TAMIL
ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம் அரசியல் சட்டப்படி செல்லாது: சோலி சொராப்ஜி கருத்து

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழக அரசு அவசரச் சட்டம் இயற்றுவது, அரசியலமைப்பு ரீதியாக செல்லாது என முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஆதரவாக தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வருகிறது. இதற்கு தமிழக அரசுக்கு அதிகாரம் இருப்பதாக மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கி உள்ளிட்ட சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், முன்னாள் அட்டார்னி ஜெனரலும், பிரபல சட்ட நிபுணருமான சோலி சொரப்ஜி தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொண்டு தனது கருத்தை தெரிவிக்கையில், தமிழக அரசு கொண்டு வரும் இந்த அவசர சட்டம், அரசியலமைப்பு ரீதியாக செல்லாது என்று கூறியுள்ளார்.

மேலும், ஜல்லிக்கட்டு பிரச்சினையில் மாநில அரசுடன் கலந்து ஆலோசித்து தீர்வு காண மத்திய அரசு விரும்புகிறது. அது நல்லது தான். ஆனால், இதுபோன்ற சூழல்களில் அவசரச் சட்டம் தேவையற்றது. அதற்கான அவசியமும் இல்லை.

பொதுவாக நெருக்கடியான காலகட்டத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தால் மட்டுமே அவசரச் சட்டம் பிறப்பிக்கலாம். ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு கொண்டு வரும் அவசரச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்தின் படி செல்லுபடியாகும் என நான் நினைக்கவில்லை. எனினும், என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும் என்றார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் குறித்து அவர் கூறுகையில், நாட்டின் அடிப்படை சட்ட விதிகளை மீறி, உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடாது. அப்படியானால், உணர்ச்சிவயப்பட்ட மக்களின் கருணையில்தான் நாம் இருக்க வேண்டி இருக்கும். போராட்டத்தை கைவிடுமாறு போராட்டக்காரர்களுடன் தலைவர்கள் பேசவேண்டும் என்றார்.

மூலக்கதை